தமிழ்நாடு அரசுப்‌ பள்ளிகளில்‌ மாணவர்களின்‌ அடிப்படை ஆங்கில மொழித்‌ திறன்களை மேம்படுத்துதல்‌ தொடர்பாக புதிய திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்ய உள்ளது. இதன்படி. Level Up திட்டம் அறிமுகமாகிறது.

தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக் கல்வித்துறை தமிழ்‌, ஆங்கிலம்‌, கணிதம்‌ மற்றும்‌ அறிவியல்‌ பாடங்களில்‌ மாணவர்களின்‌ அடிப்படை திறன்களை மேம்படுத்தும்‌ நோக்கில்‌ "திறன்கள்‌" என்ற திட்டத்தினை அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ நடைமுறைப்படுத்தி வருகிறது. மாணவர்களின்‌ அடிப்படை திறன்களில்‌ முன்னேற்றம்‌ காணப்பட்ட போதிலும்‌, தேசிய அளவில்‌ நடைபெறும் NAS, ACER‌ போன்ற திறன்‌ அளவீட்டு ஆய்வுகளில்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ வகுப்புக்கேற்ற மொழித்‌ திறன்களை அடைவதில்‌ குறைபாடு கொண்டிருப்பதாக சுட்டிக்‌ காட்டப்படுகிறது. ஆகவே மாணவர்களின்‌ ஆங்கில அடிப்படை மொழித்‌ திறன்களை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஒரு கூடுதல்‌ முயற்சியானது அவசியமாகிறது.

ஆங்கில மொழித்‌ திறன்களை எளிதாகப் பெறத் திட்டம்

இதன்‌ மூலம்‌ மாணவர்கள்‌ அடிப்படை ஆங்கில மொழித்‌ திறன்களை எளிதாகப் பெறும் வகையில்‌ மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின்‌ பல்வேறு மாவட்டங்களில்‌ பணியாற்றும்‌ மொழிப்பாட ஆசிரியர்கள்‌, குறிப்பாக ஆங்கில மொழியை கற்பிக்கும்‌ ஆசிரியர்களில்‌ பலர்‌ தங்களது வகுப்பறை சூழல்‌, பணி செய்யும் பகுதியின்‌ சமூக சூழலை கருத்தில்‌ கொண்டு மாணவர்களின் அடிப்படை மொழித்‌ திறன்களை வளர்க்கும்‌ வகையில்‌ கற்பித்தல் நுட்பங்களை தாங்களே உருவாக்கி வகுப்பறைகளில்‌ வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர்‌.

அரசுப்‌ பள்ளிகளில்‌ பணியாற்றும்‌ பல ஆசிரியர்கள்‌ தன்னார்வத்தோடு கற்பித்தல்‌ வழிமுறைகளை உருவாக்குபவர்களாகவும்‌, பிற ஆசிரியர்களால்‌ உருவாக்கப்பட்ட கற்பித்தல்‌ நுட்பங்களை தங்களது வகுப்பறை சூழலுக்கு ஏற்ப பயன்படுத்துவோராகவும்‌ உள்ள போதிலும்‌ இவ்வாறான முயற்சிகள்‌, அவ்வாசிரியர்கள்‌ பணியாற்றக்கூடிய சில பள்ளிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது. இத்தகைய சிறப்பான செயல்பாடுகள்‌, அனைத்து அரசுப்‌ பள்ளி மாணவர்களுக்கும்‌ கிடைக்கும்படி செய்திட வேண்டியது அவசியமாகிறது.

மொழி வள வங்கி

பல மாவட்டங்களில்‌ வெற்றிகரமாக செயல்பட்டு வரும்‌ ஆசிரியர்களின்‌ தனிப்பட்ட முயற்சிகளை, அதாவது, அவர்களது அணுகுமுறைகள்‌, வழிமுறைகள்‌ மற்றும்‌ கற்பித்தல்‌ நுட்பங்களை (Approach, Methodology and Techniques) ஒருங்கிணைத்து தொகுத்து, அவற்றை மொழி வள வங்கியாக மேம்படுத்தும்‌ நோக்கில்‌ முன்னெடுப்புகள்‌ மேற்கொள்ளப்பட்டு, இம்மொழி வள வங்கி மூலம் ஆசிரியர்கள்‌ தங்களின்‌ கற்பித்தல்‌ வழிமுறைகளை பிறருக்கு வழங்கவும்‌ அவற்றைப்‌ பெற விழைவோர்‌ அவற்றினைப்‌ பெற்றிடவும்‌ முடியும்‌.

இதன்‌ ஒரு பகுதியாக, மாணவர்களின்‌ மொழித்‌ திறன்களை மேம்படுத்தும்‌ ஒரு புதிய முன்னெடுப்பாக “Level Up” என்ற தன்னார்வத்‌ திட்டம்‌ அறிமுகப்படுத்தப்படுகிறது.

முதன்மை நோக்கம் என்ன?

அரசுப்‌ பள்ளிகளில்‌ குறிப்பாக ஆறு முதல்‌ எட்டாம்‌ வகுப்பு வரையிலான மாணவர்களின்‌ ஆங்கில மொழி வாசித்தல்‌, பேசுதல்‌ மற்றும்‌ எழுதுதல்‌ ஆகிய அடிப்படைத்‌ திறன்களை மாணவர்கள்‌ எளிதாக கற்றுக்‌ கொள்ளும்‌ வகையில்‌ ஏற்கனவே ஆசிரியர்களால்‌ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற செயல்பாடுகளை கொண்ட "மொழி வள வங்கி" ஒன்றை உருவாக்குவதாகும்‌. ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ இவ்வகையான முயற்சிகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வரும்‌ ஆசிரியர்களை கொண்ட வாட்ஸப் குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

2025, 2026ஆம்‌ கல்வியாண்டில்‌, ஜூன்‌ மாதம்‌ முதல்‌ டிசம்பர்‌ மாதம்‌ வரை உள்ள 7 மாத காலத்திற்கு, ஒவ்வொரு மாதத்திற்கும்‌ மாணவர்கள் அடைய வேண்டிய குறைந்தபட்ச மொழித்‌ திறன்‌ இலக்குகள்‌ நிர்ணயிக்கப்பட உள்ளன. மாவட்டம்‌ தோறும்‌ (மாவட்டத்திற்கு நான்கு அல்லது ஐந்து ஆசிரியர்கள்‌ வீதம்‌) தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள்‌ “Level Up“ புலனக் குழுவில்‌ இணைக்கப்பட்டுள்ளனர்‌. 

திறன்வளர்‌ நுட்பங்கள்

இவ்வாசிரியர்களுக்கான முதல்‌ வழிகாட்டி இணைய வழி கூட்டம்‌ 02.05.2025 அன்று காலை 10 மணி முதல்‌ 12 மணி வரை பள்ளிக்‌ கல்வி இயக்குநர்‌ தலைமையில்‌ நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில்‌ மாணவர்களின்‌ ஆங்கில அடிப்படைத்‌ திறன்கள் மேம்படுத்துவது குறித்தும்‌, சிறப்பாக தங்களது திறன்வளர்‌ நுட்பங்களை கையாளும்‌ ஆசிரியர்களின்‌ அனுபவங்கள்‌ குறித்தும்‌ கலந்துரையாடப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின்‌ ஆங்கில அடிப்படைத் திறன்கள்‌ அடைவு குறித்த மாதவாரியான இலக்குகள்‌ நிர்ணயிக்கப்பட்டு விரைவில்‌ வெளியிடப்படும்‌ என தெரிவிக்கப்படுகிறது.

இதன்‌பொருட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும்‌ திட்ட அலுவலர்கள்‌, தங்கள்‌ மாவட்டங்களில்‌ ஆங்கில மொழி கற்பித்தலில்‌ புதுமையான முயற்சிகள்‌ மேற்கொண்டு சிறப்பான கற்றல்‌ விளைவுகளை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர்களை அடையாளம்‌ கண்டு அவர்களது முயற்சிகளை பள்ளிக்கல்வி இயக்ககத்தின்‌ கவனத்திற்குகொணர்ந்து, இந்த “Level Up” என்ற தன்னார்வ செயல்பாட்டு திட்டத்தில்‌ அவ்வாசிரியர்களை இணைக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.