மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்தச் சட்டத்தின்கீழ் 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 


இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களை இலவசமாகச் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை (மே 25-ஆம் தேதி) கடைசி தேதி ஆகும். 


மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.


2011 முதல் தமிழகத்தில் அமல்


இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது.


இந்த 25 சதவீத இட ஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள், எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பது தொடர்பான விவரங்களைப் பொதுவெளியில் தனியார் பள்ளிகள் அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பெற்றோர் மத்தியில் பரவலாக எழுந்தது. செல்வாக்கு உள்ளவர்களுக்கு மட்டுமே சிறப்பு ஒதுக்கீட்டில் இடம் கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


ஆன்லைன் விண்ணப்பம்


இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை 2017-ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 2022-2023-ம் கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1.10 லட்சம் இடங்களில் சேர, ஆன்லைனில் பெற்றோர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதற்கான அவகாசம் நேற்றுடன் (மே 25-ஆம் தேதி) முடிவடைந்தது. 




என்னென்ன விதிமுறைகள்?


சட்டப்படி சேர்க்கை கோரும், குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாது வழங்க வேண்டும்.


விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில், ஆர்டிஇ சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சேர மொத்தம் 1,42,175 பேர் விண்ணப்பித்துள்ளனர். 1.10 லட்சம் இடங்களில் சேர 1.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 


விண்ணப்பித்த பெற்றோர்கள் முன்னிலையில், குலுக்கல் முறை தேர்வு மே 30-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.