அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் படித்துவரும் மாணவர்களில் ஒருவர் கூட கடந்த செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்னும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ட்ரெண்டிங் படிப்புகள் என்று கருதி தரம் குறைவான கல்லூரிகளில் கணினி அறிவியல், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு மற்றும் இணையம் ஆகிய படிப்புகளில் மாணவர்கள் கொத்துக் கொத்தாக சேர்ந்ததே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஒரு மாணவர் கூட தேர்ச்சி இல்லை

இதுகுறித்து டோட் எனப்படும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தன்னாட்சி அங்கீகாரம் அல்லாத, அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 291 தனியார் பொறியியல் கல்லூரிகளில் அண்மையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. (டிசம்பர் 2024ஆம் ஆண்டு செமஸ்டர்)

இதில் வெறும் 40 கல்லூரிகள் மட்டுமே 10 சதவீதத்துக்கும் அதிகமான தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. அதேபோல தஞ்சை மற்றும் திருவள்ளூரில் உள்ள கல்லூரியில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை.

3 பேர் மட்டுமே பாஸ்

கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 4 செமஸ்டர் தேர்வுகளை 364 மாணவர்கள்  எழுதினர். இதில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக 3 பேர் மட்டுமே பாஸ் ஆகியுள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவாக 0.82% ஆக உள்ளது.

அதேபோல தர்மபுரியில் 426 மாணவர்கள் பொறியியல் செமஸ்டர் தேர்வை எழுதியதில், 420 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 1.41 ஆக உள்ளது. மேலும் கன்னியாகுமரியில் 847 மாணவர்கள், தேர்வை எழுதிய நிலையில் 46 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டுமே 96.53 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, முதலிடத்தில் உள்ளனர். 12 கல்லூரிகள் மட்டுமே, சிறப்பான தேர்ச்சி விகிதத்தை (80 முதல் 89 சதவீதம்) வைத்திருக்கின்றன.

என்ன காரணம்?

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் (AUT) துணைத் தலைவர் திருநாவுக்கரசு இதுகுறித்து தனியார் நாளிதழிடம் கூறும்போது, சிறப்பான கல்லூரிகள் மற்றும் படிப்புகளைத் தேர்வு செய்வதில் போதிய தெளிவு இல்லாததே இதற்குக் காரணம்.

மாணவர்கள் கவர்ச்சிகரமான படிப்புகளை வழங்கும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் சேர்க்கையை மட்டுமே கவனத்தில் கொண்டு, அந்தந்த நிறுவனங்களின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்கிறார்களா என்று தெரியவில்லை. பல நிறுவனங்களில் தகுதியான பேராசிரியர்கள் இல்லை, மேலும் பொறியியல் கற்பித்தல்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்புகள் கூட இல்லை" என்று தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, "கல்லூரிகளை மாற்றும் வாய்ப்பு மாணவர்களிடம் இல்லாததால், அவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் அங்கேயே தொடர்ந்து படிக்கிறார்கள். இது மோசமான செயல்திறனுக்கு வழிவகுக்கிறது" என்றும் திருநாவுக்கரசு கூறி உள்ளார்.

பிரச்சினையின் ஆணிவேர் குறித்து தீர்க்கமாக அலசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர், ’’மோசமான செயல்திறனைக் கொண்டுள்ள கல்லூரிகளின் அங்கீகாரத்தை, அரசியல் தலையீடு காரணமாக ரத்து செய்ய முடிவதில்லை. ஆசிரியர்களின் தரம் மற்றொரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.