எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி மாணவர்கள், ஜூன் 29ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’கடந்த ஆண்டுகளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. எனினும் இந்த ஆண்டு நீட் தேர்வு முடிந்து, மாணவர்களின் மேல்நிலைப் பள்ளி இறுதி தேர்வு முடிவு வெளியான பின்னர் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
நடப்பு ஆண்டில், ஜூன் 6ஆம் தேதி முதல் இளங்கலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்பும் மாணவர்களுக்காக விண்ணப்ப்பிதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும். அந்த கால அவகாசம் 5 நாட்கள் வரை இருக்கும்’’ என்று தெரிவித்து இருந்தார்.
அந்த வகையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் 4 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் தங்களின் தகவலை உள்ளீடு செய்து, முன்பதிவு செய்ய வேண்டியது முக்கியம்.
- ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது உள்நுழை எண் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி, மீண்டும் விண்ணப்பித்தால் போதும்.
- தற்பொழுது உபயோகிக்கும் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மட்டும் உரிய இடத்தில் பதிவு செய்யவும்.
- பதிவு செய்தபின், விண்ணப்பதாரர்கள் தங்கள் அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சலை மாற்ற முடியாது என்பதால், கவனமாக தகவல்களை உள்ளிட வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
- இறுதியாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்த (Final Submission) பின் அந்த விண்ணப்பத்தினை மாற்ற இயலாது.
- விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய பிறகு அவர்களுக்கு விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு தரப்படும். அதனை பயன்படுத்தி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர https://tnmedicalselection.net/news/06062025002732.pdf என்ற அறிவிக்கையை வாசித்தபிறகு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களை https://tnmedicalselection.net/ அல்லது www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளை க்ளிக் செய்து அறியலாம்.