எந்தப் படிப்பாக இருந்தாலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று தன்னார்வ அமைப்பு அறிவித்துள்ளது.


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது அதிக கனமழை பெய்தது.


கடும் பாதிப்பு


டிசம்பர் 17ஆம் தேதி அதிகாலை 2  மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி பெய்தது. இதன் காரணமாக நீர்நிலைகள் நிரம்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதைத் தொடர்ந்து பொது மக்களும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


வட தமிழ்நாட்டில் பாதிப்பு


இதற்கிடையே மிக்ஜாம் புயலால் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  


இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு புத்தகங்களை இழந்த, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என Anandham Youth Foundation  என்ற தன்னார்வ அமைப்பு அறிவித்துள்ளது.


இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


’’சென்னை கோடம்பாக்கத்தை மையமாகக் கொண்டு ஆனந்தம் யூத் பவுண்டேஷன் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று, கல்லூரிகளில் சேர வசதி இல்லாத கிராமப்புற ஏழை மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கான முழு கல்வி செலவையும் ஏற்று அவர்களை படிக்க வைத்து வருகிறது இந்த அமைப்பு.


பாடப் புத்தகங்களை இழந்த மாணவர்கள்


தற்போது தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பல கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பாடப் புத்தகங்களை இழந்துள்ளனர். எனவே அவர்களுக்கு உதவி செய்ய உள்ளோம். 


அதில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்த பொறியியல், கலை அறிவியல், சட்டம் உள்ளிட்ட எந்த கல்லூரி படிப்பாக இருந்தாலும் வெள்ளத்தில் தங்களுடைய பாடப்புத்தகங்களை இழந்திருந்தால் 70109 87336 என்ற வாட்ஸப் எண்ணிற்கு பாதிக்கப்பட்ட புகைப்பட சான்றுகளை அனுப்பி, இலவசமாக பாடப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம்’’.


இவ்வாறு ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: 70109 87336