பொறியியல் படிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதாகவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக விண்ணப்பம் பெறப்பட்டு வருவதாகவும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


சென்னையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


''இந்த கல்வியாண்டில் 1,87,693 விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அதிகமாக வந்துள்ளன. தமிழக முதல்வர் தொடங்கிய நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்கள் படிக்க ஆர்வத்துடன் முன் வந்துள்ளனர். 


ஜூலை 2ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று நம்புகிறோம். அதையடுத்த பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது.  ஆண்டுதோறும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


சிவில், மெக்கானிக்கல் பாடப் பிரிவுகள் மட்டுமே தமிழில் இருந்த நிலையில், பிற பாடப் பிரிவுகளுக்கும் தமிழ் மொழிமாற்றம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. பொறியியல் பாடப் பிரிவில் 70 புத்தகங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை விரைவில் வெளியாகும்.


பொறியியல் படிப்புகளுக்கு அதிகரிக்கும் வரவேற்பு 


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ், இந்த ஆண்டு 7,852 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். 31,448 பேர் இந்த ஆண்டு 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பித்துள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து 394 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.


விளையாட்டு வீரர்களிடம் 5,024 விண்ணப்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளிடம் இருந்து 1,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அரசு வழங்கும் உதவித் தொகை, வசதி ஆகியவற்றால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 


பட்டமளிப்பு விழா தாமதம்


கோவை பாரதியார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு ஆளுநரே காரணம். விழாவுக்கு வட இந்திய சிறப்பு விருந்தினர்களையும் மத்திய அமைச்சர்களையும் அழைத்து வர விரும்புகிறார். அவர்கள் தேதி கொடுக்கத் தாமதம் ஆகிறது. அதனால் தமிழக விருந்தினர்களை வைத்தே பட்டமளிப்பு விழாவை நடத்தலாம்.


பட்டப் படிப்பு தேர்ச்சி பெற்ற 9.29 லட்சம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாகப் பட்டம் பெறக் காத்திருக்கின்றனர். பட்டமளிப்பு தாமதம் ஆவதால், படிக்கவும் வேலைக்குச் செல்லவும் காத்திருக்கும் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகின்றனர். 


துணை வேந்தர் நியமனத்திலும் தாமதம்


ஆளுநர் பரிந்துரைத்தவர், அரசால் பரிந்துரைக்கப்பட்டவர், சிண்டிகேட் குழுவால் பரிந்துரைக்கப்பட்டவர் என 3 பேரின் பெயரைக் கொடுத்துவிட்டோம். அவர்களின் பட்டியலை அக்டோபர் 19, 2022ஆம் தேதியிலேயே கொடுத்துவிட்டோம். எனினும் இதுவரை கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தர் பெயரை இறுதி செய்யவில்லை. ஆளுநர் யுஜிசியில் இருந்து ஒருவரை நியமிக்க விரும்புகிறார். எனினும் சட்டத்தில் இதற்கு இடமில்லை. அதை மீறி ஆளுநர் செயல்பட விரும்புகிறார்.''. 


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.