பள்ளிக்கே செல்லாமல், குறைந்த ஊதியத்தில் வேறு ஆட்களைப் பணியமர்த்தி வேலை பார்க்க வைக்கும் ஆசிரியர்களுக்குத் தொடக்கக் கல்வித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிப் பணிக்கு சரியாக வருகை புரியாமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்துதலைக் கண்டுபிடித்தால், மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், இராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி (ஆங்கிலம்) ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த பாலாஜி என்பவர் பள்ளிப் பணிக்கு சரியாக வருகை புரியாமல் வேறொரு நபரைக் கொண்டு பாடம் நடத்தினார் என இராமியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் மற்றும் கல்வி மேலாண்மைக் குழு ஆகியோரிடம் இருந்து புகார் மனு தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு அம்மனுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் நேரடி ஆய்வு
இதன் அடிப்படையில் அரூர் மாவட்ட கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) 27.09.2024 அன்று பள்ளியில் நேரடி ஆய்வு செய்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் இப்புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
மேலும், இப்புகாரில் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து விட்டதாகவும், அதனால் அவ்வூரிலுள்ள மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று பயிலும் நிலை உருவாகியதால் இந்நிகழ்வினை கண்டித்து மேற்படி ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்யுமாறு ஊர் பொதுமக்களால் தெரிவிக்கப்பட்டது.
தற்காலிக பணி இடைநீக்கம்
மாவட்டக் கல்வி அலுவலரின் விசாரணையில் பாலாஜி (பட்டதாரி ஆசிரியர்) என்பவர் பள்ளிப் பணிக்கு சரியாக வருவதில்லை என்றும் அவருக்கு பதிலாக இல்லம் தேடிக் கல்வியில் பணிபுரிந்து வரும் சிந்துஜா என்பவர் அப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் நடத்தி வந்துள்ளார் என விசாரணையில் கண்டறியப்பட்டது. புகாருக்கு ஆளான பாலாஜியை தற்காலிக பணி இடைநீக்கம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.
பாலாஜி என்பவருக்கு பதிலாக மாற்று நபரைக் கொண்டு பாடம் நடத்திய செயலினை உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்தாமல் இச்செயலினை ஊக்குவித்த தலைமையாசிரியர் நாகலட்சுமி என்பவரை அதே ஒன்றியத்திற்குட்பட்ட தாசம்பைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நிர்வாக மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
புகார் மீது தனிக்கவனம்
இதுபோன்ற நிகழ்வுகளால் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு ஆசிரியர்கள் கற்றல் - கற்பித்தல் பணியினை மேற்கொள்ளாமல் வெளிநபரைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்தப்படுவது குறித்து பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளிப் பார்வையின் போது ஏதும் கண்டறியப்பட்டாலோ அல்லது இது குறித்த புகார்கள், ஏதும் பெறப்பட்டால் கண்டிப்பாக அப்புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலரே (தொடக்கக் கல்வி) விசாரணை மேற்கொண்டு, அவ்விசாணையில் உண்மை இருப்பின் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்க வேண்டும்.
பள்ளிகளில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது அத்தகவலை மாவட்டக் கல்வி அலுவலருக்கு அளிக்கத் தவறும் பட்சத்தில் தலைமை ஆசிரியர், மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.