பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்கள் 2010-க்கு முன்னரே பணியில் சேர்ந்து இருப்பின், அவர்கள் ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம்‌ இல்லை என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 


தமிழ்நாடு ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ பட்டதாரி ஆசிரியர்‌ பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 


இதுகுறித்துத் தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: 


''2008- 2009 ஆம்‌ ஆண்டில்‌ ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ தேர்வு செய்யப்பட்டு நியமணம்‌ பெற்று தமிழ்நாடு தொடக்கக்‌ கல்வி இயக்கக நிர்வாகத்தின்‌ கீழ்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை  செய்ய வேண்டிய அவசியமில்லை எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


2009- 2010 ஆம்‌ ஆண்டில்‌ஆசிரியர்‌ தேர்வு வாரியம்‌ மூலம்‌ முறையாக நியமனம்‌ செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தனியே பணி வரன்முறை செய்ய வேண்டியதில்லை. மேலும்‌, தற்காலிக அடிப்படையில்‌ தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படும்‌ நியமனங்களுக்கும்‌, நீதிமன்ற வழக்குகள்‌ மற்றும்‌ வேறு சில‌ நிர்வாக காரணங்களுக்காக வழங்கப்படும்‌ நியமனங்களுக்கும்‌ தனியே பணிவரன்முறை செய்யப்பட வேண்டும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வு சார்ந்த அரசாணை எண்‌ 181, பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பர் 2011-ல் வெளியிடப்பட்ட பிறகு, பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்களில் பணி நியமனத்துக்கான ஆசிரியர்‌ தேர்வு வாரிய விளம்பரம்‌ 23.08.2010-க்கு முன்னரே வெளியாகி இருப்பின், அவர்களும் ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம்‌ இல்லை.


எனவே ஆசிரியர்கள்‌ சார்பில்‌ பணி வரன்முறை / தகுதிகாண்‌ பருவம்‌ முடித்து ஆணை வழங்குவதில்‌ கால தாமதம்‌ ஏதுமின்றி செயல்பட சார்நிலை அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது''. 


இவ்வாறு தொடக்கக்‌ கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். 




பின்னணி என்ன?


அரசு கொண்டுவந்த இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராகப் பணியில் சேர மத்திய அரசு, மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு (TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET)) மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். 


இந்தச் சட்டத்தை மத்திய அரசு 2009-ல் அறிமுகம் செய்தாலும் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து புதிதாக ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் டெட் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் டெட் தேர்வெழுத அவகாசம் தரப்பட்டது. 


இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர்களாகப் பணி நியமனம் பெற்றவர்கள் 2010-க்கு முன்னரே பணியில் சேர்ந்து இருப்பின், அவர்கள் ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம்‌ இல்லை என்று தொடக்கக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.