தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மீண்டும் அக்டோபர் 7ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தேர்வு விவரம்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களின் திறனைக் கண்டறிவதற்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், 2023- 2024 ஆம் கல்வியாண்டு முதல் "தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு" நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் 1000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி 500 மாணவர்கள், 500 மாணவியர்கள் தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக உதவித் தொகையாக ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000 இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும். குறிப்பாக மாணவர்களுக்கு மாதம் ரூ.1000, வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் வழங்கப்படும். இதற்கு ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர்.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பித்து, உதவித் தொகையைப் பெறலாம்.
இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து தேர்வு செப். 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தேர்வு மீண்டும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மீண்டும் ஒத்தி வைப்பு
''தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 23.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு 30.09.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் எண்ற தேர்வு தேதி மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டது. தற்போது, மேற்படி தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு மேலும் ஒத்திவைக்கப்பட்டு, 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இத்தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் குறித்தான விவரத்தினை தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அறியும் வண்ணம், பள்ளிகளின் அறிவிப்பு பலகைவழி தெரிவித்திட அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்'' என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு குறித்து விரிவாக அறிய https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1690884982.pdf என்ற இணைப்பை மாணவர்கள் க்ளிக் செய்து பார்க்கலாம்.
இதையும் வாசிக்கலாம்: Arts College UG Admission: மிஸ் பண்ணிடாதீங்க மாணவர்களே... அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இன்றே கடைசி!