தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் ஜூலை 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு ஆகஸ்ட் 19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் 19 முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு நேற்று (ஜூலை 18) விண்ணப்பப் பதிவு தொடங்கியது. இதற்கு ஜூலை 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிப்பது எப்படி?


தேர்வுத்துறை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டும். குறிப்பாகத் தேர்வர்கள் தங்களின் இருப்பிடத்துக்கு உட்பட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள சேவை மையத்துக்குச் செல்ல வேண்டும். போகும்போது குறைந்தபட்சக் கல்வித் தகுதிக்கான சான்றிதழ் நகலைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு இணையம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிச்சயம் நிராகரிக்கப்படும். 


விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?


தேர்வுக் கட்டணம் - ரூ.125,


இணையவழி பதிவுக் கட்டணம் - ரூ.70


மொத்தம் - ரூ.195 பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும்.


மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தட்கல் முறையில் ஜூலை 26, 27ஆம் தேதிகளில் பதிவு செய்துகொள்ளலாம். இதற்கு தேர்வுக் கட்டணத்துடன், தட்கல் கட்டணத் தொகையாக ரூ.500 கூடுதலாக செலுத்த வேண்டும்.




விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டியவை


முதன்முதலாக தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்துடன் பள்ளி பதிவுத் தாள் நகல் அல்லது சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் அல்லது பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


ஏற்கெனவே 8-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி தோல்வி அடைந்த பாடங்களை எழுதுவதற்கு விண்ணப்பிப்பவர்கள்முந்தைய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.


அனைத்துத் தனித்தேர்வர்களும் ரூ.42-க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட, பின் கோடுடன் கூடிய சுய முகவரியிட்ட உறையை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.


தேர்வர்கள் தேர்வெழுத விரும்பும் மொழியை (தமிழ் / ஆங்கிலம்/ உருது) கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 


கூடுதல் விவரங்களுக்கு: https://tnegadge.s3.amazonaws.com/notification/ESLC/1720593490.pdf