உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களில், கடந்த மார்ச் 2025 நடைபெற்ற 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்விற்கு வருகை புரியாத மாணவர்களை தொடர்பு கொண்டு மறுதேர்விற்கு விண்ணப்பிக்க வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் கூறி உள்ளதாவது:
உயர்கல்வி வழிகாட்டித் திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் உயர் கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மே 29 கடைசி
அதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் 2025 நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள், துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு, 14.05.2025 (புதன்கிழமை முதல்) 29.05.2025 (வியாழக்கிழமை, வரையிலான நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 11 மணி முதல் மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்று துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க தலைமையாசிரியர்கள் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
35 ஆயிரத்து 350 பேர் துணைத்தேர்வு எழுதலாம்
பள்ளி தேர்வுகள் இயக்ககத்தின் தரவின்படி, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாமல் 28,292 மாணவர்களும், தேர்வு எழுதாமல் 7,058 மாணவர்களும் உள்ளனர். இம்மாணவர்கள் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க குறுகிய கால இடைவெளி மட்டுமே உள்ள நிலையில், மாணவர்கள் அனைவரும் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வு எழுதுவதற்கு ஏதுவாக மாணவர்களுக்கு தக்க வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் துணைத் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்களின் வாயிலாக எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்ட வாரியாக -12 ஆம் வருப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, எழுதாத மாணவிகளின் எண்ணிக்கை விவரங்கள்