பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
TN 12th Result 2026: "காஞ்சிபுரம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில், 565 மதிப்பெண்கள் பெற்று காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை படைத்துள்ளார்."

தடைகளை படிக்கற்களாக மாற்றி, விடாமுயற்சியால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி காவ்யா நிரூபித்துள்ளார். இன்று வெளியான பிளஸ் 2 அரசுப் பொதுத்தேர்வு முடிவுகளில் 600-க்கு 565 மதிப்பெண்கள் பெற்று அவர் வியக்கத்தக்க சாதனையைப் படைத்துள்ளார்.
எளிய பின்னணியும் அசாத்திய உழைப்பும்
காஞ்சிபுரம் என்.வி.எம்.பி நகர், வேகவதி நதி சாலைப் பகுதியில் வசித்து வரும் ஜெயக்குமார் - பிரேமா தம்பதியரின் மகள் ஜெ. காவியா (18). நெசவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இந்த எளிய குடும்பத்தில் பிறந்த காவியாவுக்கு, பிறவியிலேயே பார்வைத்திறன் குறைபாடு இருந்தது. இருப்பினும், தனது குறைபாட்டை ஒருபோதும் முடக்க நினைக்காத காவியா, கல்வியின் மீது மிகுந்த ஆர்வம் காட்டினார். இதற்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கி, அங்கிருக்கும் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை மேற்கொண்டார்.
பாடவாரியாகப் பெற்ற மதிப்பெண்கள்
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடும் உழைப்பைச் செலுத்திய காவியா, அனைத்துப் பாடங்களிலும் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவரது மதிப்பெண் பட்டியல் இதோ:
தமிழ்: 96
ஆங்கிலம்: 88
புவியியல்:96
வரலாறு:98
பொருளியல்: 89
கணினி அறிவியல்: 98
மொத்த மதிப்பெண்கள்: 565 / 600
இந்தச் சாதனை குறித்து தகவல் அறிந்ததும், அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் தோழிகள் காவியாவை நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
தன்னம்பிக்கை தான் எனது கண்கள்" – மாணவி நெகிழ்ச்சி
தனது வெற்றி குறித்து மாணவி காவியா உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுகையில், எனக்கு பிறவியிலேயே பார்வைத்திறன் இல்லை என்றாலும், அதற்காக நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. என் முன்னேற்றத்திற்கு எனது தன்னம்பிக்கை தான் கண்களாக இருந்தது. பிளஸ் 2 வரை பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் படித்த எனக்கு, இனி பொதுக் கல்லூரியில் மற்ற மாணவர்களோடு இணைந்து படிக்க வேண்டிய சவால் காத்திருக்கிறது. நான் அடுத்ததாக ஆங்கில இலக்கியம் (B.A. English Literature) பயில ஆர்வமாக உள்ளேன். மேலும், தனது இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், தகுந்த வழிகாட்டுதல் வழங்கிய ஆசிரியர்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
எதிர்கால லட்சியம்
பார்வையற்ற மாணவர்களுக்கான கல்வி வசதிகள் பள்ளிப் பருவத்தோடு முடிந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் காவியா, கல்லூரியிலும் இதேபோன்ற சிறப்பான மதிப்பெண்களைப் பெற்று உயரிய நிலையை அடைவதையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார். நெசவுத் தொழில் செய்யும் பெற்றோரின் கடின உழைப்பிற்கு பெருமை சேர்த்துள்ள இம்மாணவியின் சாதனை, பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















