2024- 25 ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளானது இன்று வெளியானது. மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மார்ச் 3 -ஆம் தேதி முதல் 25 வரை தேர்வுகள் நடந்தது. தொடர்ந்து மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 4 -ஆம் தேதி தொடங்கி 17 -ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன.
தேர்வு முடிவுகள்
12 -ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள், மே 8 -ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை டிபிஐ வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியது. குறிப்பாக சென்னை, நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
மாநில தேர்ச்சி விபரம்
12 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 95.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகமாகியுள்ளன. மாணவர்கள் 93.16 சதவிகிதமும் மாணவிகள் 96.70 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் விபரம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.25 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட முழுவதும் மாணவர்கள் 4 ஆயிரத்து 633 பேரும், மாணவிகள் 5 ஆயிரத்து 419 பேரும் என மொத்தம் 10 ஆயிரத்து 52 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 218 மாணவர்களும், 5 ஆயிரத்து 155 மாணவிகளும் என 9 ஆயிரத்து 373 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.70 சதவீதம் என வழக்கம்போல் பெண் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாநில அளவில் மயிலாடுதுறை மாவட்டம் 33 வது இடத்தை பெற்றுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுதான் வாழ்க்கை இல்லை
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுதான் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்றால், நிச்சயம் இல்லை. அதனால், மாணவச் செல்வங்களே தேர்வு எழுதியாகிவிட்டது, முடிவும் வந்துவிட்டது. இனி எதையும் மாற்ற முடியாது. ஆகையால், பதற்றமடையாமல் தேர்வு முடிவுகளை எதிர்கொள்ளுங்கள்.
தேர்வில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைத்தால் மகிழ்ச்சி, இல்லையென்றால் வருத்தம் இருக்கும். ஆனால், இதுதான் நம் வாழ்க்கையை தீர்மானிக்க போகும், இறுதி வாய்ப்பு கிடையாது. எதிர்பார்த்த முடிவு கிடைக்காவிட்டால், அதற்கடுத்த என்ன செய்யலாம் என்று, உங்கள் ஆசிரியரிடமோ அல்லது உங்களுக்கு தெரிந்த வல்லுநர்களிடமோ கலந்து ஆலோசித்து, அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுங்கள்.