அரசுப் பேருந்தில் ஓடிச்சென்று தேர்வெழுதிய மாணவி, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று அசத்தி உள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சுஹாசினி கடந்த 25.03.2025 ஆம் தேதி தேர்வு எழுதச் சென்றார். அவர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது, அரசுப் பேருந்து நிற்காமல் சென்றது. பேருந்து நிற்காமல் வேகமாகச் சென்றதால் அதைப் பின் தொடர்ந்து ஓடிய மாணவியின் வீடியோ வைரலானது.
ஓட்டுநர் பணியிடை நீக்கம், நடத்துநர் பணி நீக்கம்
இதுகுறித்து ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கணேசன், ‘’மாணவியை ஏற்றாமல் வேகமாக சென்றது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் முனிராஜ், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நடத்துநர் அசோக்குமார், பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எவ்வளவு மதிப்பெண்கள்?
இந்த நிலையில், அந்த மாணவி சுஹாசினி தற்போது, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 437 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். குறிப்பாக அவர் தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். ஆங்கிலத்தில் 68 மதிப்பெண்களும் இயற்பியலில் 61 மதிப்பெண்களும் பெற்றுள்ளார்.
மேலும், வேதியியலில் 56 மதிப்பெண்களையும் தாவரவியலில் 81 மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். அதேபோல விலங்கியலில் 78 மதிப்பெண்களையும் மாணாவி சுஹாசினி பெற்றுள்ளார்.