2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான தமிழக பள்ளிக் கல்வி வாரியத்தின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியாக உள்ளன.

மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். மார்ச் 3ஆம் தேதி முதல் 25 வரை தேர்வு நடந்தது. தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்.4ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடந்தது.

இன்று காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள்

இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், ஒருநாள் முன்கூட்டியே 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. குறிப்பாக இன்று (ஏப்ரல் 8ஆம் தேதி) காலை 9 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?

வழி 1: அதிகாரப்பூர்வ இணையதளம்

12ஆம் வகுப்பு எழுதிய மாணவர்கள் தங்களின் பொதுத் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனினும் இதற்கு, தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டியது முக்கியம்.

வழி 2: மத்திய அரசு இணையதளம்

results.digilocker.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் தேர்வர்கள்‌ பள்ளிகளில் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.

வழி 3: பள்ளி மூலமாக..

பள்ளி மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகளிலும்‌ தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்‌.

வழி 4: மொபைல் வழியாகவும் பார்க்கலாம்

தேர்வு முடிவுகளைக் குறுஞ்செய்தி மூலமாகவும் காணலாம். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு அவர்கள்‌ பயின்ற பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்படும்‌.

அதேபோல தனித் தேர்வர்களுக்கு ஆன்‌லைனில்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி வழியாக‌ தேர்வு முடிவுகள்‌ அனுப்பப்படும்‌.