பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர் எழுதும் மாணவர்களுக்கான பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள நாளையே (ஜன. 31) கடைசித் தேதி ஆகும். 

Continues below advertisement

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா கூறி உள்ளதாவது:

நடைபெற உள்ள 2025- 2026 மேல்நிலை இரண்டாம் ஆண்டு, மேல்நிலை முதலாம் ஆண்டு அரியர் பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள 21.10.2025 முதல் 12.11.2025 வரையிலான நாட்கள், 04.12.2025/ 05.12.2025 ஆகிய நாட்கள் மற்றும் 30.12.2025 முதல் 02.01.2026 வரையிலான நாட்களிலும் கால அவகாசம் வழங்கப்பட்டது.

Continues below advertisement

தற்போது, தேர்வெண்ணுடன் கூடிய பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சேர்க்கை, நீக்கம் கோரி பள்ளிகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்ட வண்ணம் உள்ளது. இதனால் மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் சேர்க்கை, நீக்கம் ஆகியவற்றை மேற்கொள்ள 30.01.2026 மற்றும் 31.01.2006 ஆகிய நாட்களில் கால அவகாசம் வழங்கப்படுகிறது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிவுறுத்தல்கள், அனைத்து மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல புதுச்சேரி, காரைக்கால் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டு உள்ளன. 

தேர்வு எப்போது?

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 2026ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு மார்ச் 2ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ் மற்றும் மொழிப் பாடங்கள் மார்ச் 2-ல் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 5ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் மார்ச் 9ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடைபெற உள்ளன. 

தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரப் பாடங்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 17 அன்று கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், வணிகவியல் பாடத் தேர்வுகளும் மார்ச் 23-ல் உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதப் பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெற உள்ளன. 

இறுதியாக, மார்ச் 26ஆம் தேதி கணினி அறிவியல், உயிர் வேதியியல், அரசியல் அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து விடைத் தாள்கள் திருத்தப்பட்டு, மே 8ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.