மாநிலம் முழுவதும் மார்ச் மாதம் நடைபெற்ற 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியாகி உள்ளன. இதில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 8,07,098 பேர் எழுதினர். 11,025 பேர் தேர்வை எழுதவில்லை. இதில், 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.09 சதவீதம் தேர்ச்சி பதிவாகி உள்ளது. இதில் 4,03,949 மாணவிகளும் 3,39,283 மாணவர்களும் அடங்குவர். 

வழக்கம் போலவே மாணவர்களைக் காட்டிலும் மாணவிகள், 6.43 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.92 சதவீதம் அதிகமாகத் தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள் 87.34 சதவீதமும் அரசு உதவிபெறும் பள்ளிகள் 93.09 சதவீதமும் தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளன. தனியார் பள்ளிகள் இருப்பதிலேயே அதிகபட்சமாக 98.03 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளைப் போலவே அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 97.76 சதவீதம் தேர்ச்சி பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் 96.97 சதவீதமும் விருதுநகர் 96.23 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. அடுத்து கோயம்புத்தூர் மாவட்டம், 95.77 சதவீதமும் தூத்துக்குடி மாவட்டம் 95.07 சதவீதமும் பெற்றுள்ளன.

நூற்றுக்கு நூறு எத்தனை பேர்?

தமிழ் பாடத்தில் 41 மாணவ- மாணவிகள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 39 பேரும் இயற்பியலில் 390 பேரும் சதமடித்து உள்ளனர்.

அதேபோல, வேதியியலில் 593 பேரும் உயிரியலில் 91 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர். அதிகபட்சமாக கணினி அறிவியலில் 3535 பேர் சதம் பெற்று அசத்தி உள்ளனர். குறைந்தபட்சமாக 2 பேர் விலங்கியலில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கணக்குப் பாடத்தில், 1338 பேர் 100-க்கு 100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

முதலிடம் பிடித்த மாவட்டங்கள்

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

மாணவர்கள் 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் போலவே இதையும் இணையத்திலும் நேரடியாகவும் காணலாம். 

இணையத்தில் மாணவர்கள் dge.tn.gov.in, tnresults.nic.in, results.digilocker.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்களுக்குச் சென்று அறிந்து கொள்ளலாம். 

அதேபோல, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்றும் அறிந்துகொள்ளலலாம். மேலும் மாணவர்கள்‌ தங்களின் பள்ளிகளில்‌ சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில்‌ குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும் தேர்வு முடிவுகள்‌ குறுஞ்செய்தி ஆக அனுப்பப்பட்டு உள்ளன.