மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுக்கான மறு மதிப்பீடு, மறு கூட்டல் தேர்வு முடிவுகளை ஜூன் 30ஆம் தேதி வெளியிடுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
''நடைபெற்று முடிந்த மார்ச் - 2025, மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் Www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் 30.06.2025 (திங்கள் கிழமை) அன்று பிற்பகல் முதல் வெளியிடப்பட உள்ளது.
இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல்
மறு கூட்டல் / மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், உடன் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை (Statement of Marks) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 8,07,098 பேர் எழுதினர். தொடர்ந்து இவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி அன்று வெளியாகின. இதில் 92.09 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
துணைத் தேர்வுகள்
இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் தேர்வை எழுதாத மாணவர்களுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மதிப்பெண்களில் போதாமை காரணமாக, மாணவர்களுக்கு மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு அறிவிக்கப்பட்டது.
இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியல் நாளை மறுநாள் (ஜூன் 30) வெளியாக உள்ளது. இந்தப் பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத் தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.