பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு அட்டவணை நேற்று (நவ.16)  வெளியானது. அட்டவணையை சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார்.


தேதி வாரியாக அறிவிப்பு


இதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.


ஏப்ரல் 1ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி விருப்ப மொழி பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி அன்று கடைசியாக சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


வேறு தேதிக்கு மாற்றக் கோரிக்கை


இந்த நிலையில், பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறி உள்ளதாவது:


''பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு 1.4.2024 அன்று நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய நாள் கிறிஸ்தவர்கள் கொண்டாடக் கூடிய புனித வெள்ளி ஈஸ்டர் திருநாள் வருகிறது. ஆகவே அரசுப் பள்ளி மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களை கணித தேர்வுக்கு தயார் செய்வதில், பள்ளிக்கு வரச்செய்து பயிற்சி அளிப்பது ஆசிரியர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது.


29.3.23 - புனித வெள்ளி / அரசு விடுமுறை


30.3.23 - சனிக்கிழமை


31.3.23 – ஈஸ்டர் ஞாயிற்றுக் கிழமை


1.4.23 – 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு.


ஆகவே 1.4.24 அன்று அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்பு கணித தேர்வினை வேறு தேதிக்கு மாற்றி உத்தரவிட தங்களை பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


ஒவ்வோர் ஆண்டும் பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை கடந்த கல்வி ஆண்டு சுமார் 10 லட்சம் பேர் எழுதி இருந்தனர்.