பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச், ஏப்ரல் 2026-ல் மறு கூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நடைபெற்ற மார்ச்/ ஏப்ரல்-2026, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு விடைத்தாள் ஒளிநகல் பெற்ற தேர்வர்கள் மறுகூட்டல் (Re total) மற்றும் மறு மதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பிக்க 17.06.2026 - 23.06.2026 வரையிலும், பின்னர் தேர்வர்களின் நலன் கருதி மீளவும் 25.06.2026 அன்று ஒரு நாளும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு /மறு கூட்டல் கோரி பாடவாரியாக பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை - 8682 (மறு மதிப்பீடு- 7931 /மறுகூட்டல்-751) ஆகும்.
ஜூன் 25 முதல் மதிப்பீடு
இதனைத் தொடர்ந்து மறுமதிப்பீடு / மறுகூட்டல் பணி தொடர்பாக முகாம் அமைக்கப்பட்டது. அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர் குழுவினரைக் கொண்டு விடைத்தாள்கள் மறு மதிப்பீடு / மறு கூட்டல் செய்யப்பட்டது. அந்தப் பணி 25.06.2026 அன்று தொடங்கி 04.07.2026 அன்று முடிக்கப்பட்டது.
தற்போது, மறுகூட்டல் (Re-total) மற்றும் மறுமதிப்பீடு (Revaluation) கோரி விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 06.07.2026 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் வெளியிடப்பட உள்ளது.
இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாட்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காண்பது எப்படி?
மறுகூட்டல் / மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Certificate) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
தேர்வர்களுக்கு அசல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
மேற்காண் பொருள் தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075/ 9498383076 என்ற கைப்பேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/ என்ற இணைய முகவரியைக் காணலாம்.
