2026ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ஆம் தேதியில் தொடங்குகிறது. அதேபோல மார்ச் 26 அன்று பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் முடிவடைகின்றன. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ஆம் தேதி முடிகிறது.
தேர்வு முடிவுகள் எப்போது?
இவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு மே 8 அன்று வெளியாக உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 20ஆம் தேதி வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025- 26ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 8.07 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் 8.70 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுத உள்ளனர்.
செய்முறைத் தேர்வு எப்போது?
12-ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வுகள் 09.02.2026 முதல் 14.02.2026 நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் 08.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் 23.02.2026 முதல் 28.02.2026 வரை நடைபெற உள்ளன. தேர்வு முடிவுகள் 20.05.2026 வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலக்கல்விக் கொள்கை 2026-இன்படி 2025-26-ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பிறக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால், மார்ச் 2018-ஆம் ஆண்டு முதல் ஜூன்2026-ஆம் ஆண்டு வரை மேல்நிலை 11 ஆம் வகுப்பு தேர்வில் வரை பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாத தேர்வர்களுக்கு 03.03.2026 துவங்கி 27.03.2026 வரை நடைபெறவுள்ளது. செய்முறைத் தேர்வுகள் 16.02.2026 முதல் 21.02.2026 வரை நடைபெற உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம் கூட்ட அரங்கில் இன்று (04.11.2025) செவ்வாய்க் கிழமை, இந்த தேர்வு அட்டவணையை வெளியிட்டார். அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் மார்ச் / ஏப்ரல் -2026-ல் நடைபெறவுள்ள இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு (arrear) மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
இதனைத் தொடர்ந்து அமைச்சர் தலைமையில், பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.