தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது.


மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதேபோல 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.


25 லட்சம் மாணவர்கள் எழுதும் தேர்வு


12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், வேதியியல் உள்ளிட்ட 4 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று முடிந்துள்ளன. தொடர்ந்து மார்ச் 15, 19 மற்றும் 22 ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளன.


மொத்தமாக ஏப்ரல் 8ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. 2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.


 விடைத்தாள் திருத்தம் எப்போது?


இந்நிலையில் தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதற்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் துறை தற்போது வெளியிட்டுள்ளது.


 அதன்படி 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 1ஆம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இவர்களுக்கு ஏப்ரல் 13ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் நடைபெற உள்ளது.


மற்ற வகுப்புகளுக்கு எப்போது?


11ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடத்தப்பட உள்ளன. தொடர்ந்து பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையும் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட உள்ளது.


இந்தப் பணிகள் முடிவடைந்ததும் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும்.


தேர்வு முடிவுகள் எப்போது?


தொடர்ந்து 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல 11ஆம் வகுப்புக்கு மே 14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.