அதிர்ச்சி… அரசுப்பள்ளி ஆண்டுவிழா; கலந்துகொண்டு பாட்டு பாடிய சரித்திர பதிவேடு குற்றவாளி!
ஆண்டு விழா நிகழ்ச்சியில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாவின் கணவர் கணேசன் என்பவரும் பங்கேற்று, விழா மேடையில், சினிமா படப் பாடலைப் பாடியுள்ளார்.

ஆம்பூர் அருகே நடைபெற்ற அரசுப் பள்ளி ஆண்டு விழாவில், சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவர் கலந்துகொண்டு மாணவர்களிடையே பாட்டு பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கன்றாம்பள்ளி பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் உள்ளது. இந்தப் பள்ளியில் இன்று பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது, இதில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில், பள்ளி ஆண்டு விழாவில், துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சுவிதா சிறப்பு அழைப்பாளாராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதற்கிடையே ஆண்டு விழா நிகழ்ச்சியில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுவிதாவின் கணவர் கணேசன் என்பவரும் பங்கேற்று, விழா மேடையில், சினிமா படப் பாடலைப் பாடியுள்ளார்.
கணேசன் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள், உள்ள நிலையில் அவர் சரித்திர பதிவேடு குற்றவாளி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் அரசுப் பள்ளியில் விழாவில் பங்கேற்று பள்ளி மாணவர்களிடையே பாடல் பாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரிடம் கேட்டபோது, ’’பள்ளி ஆண்டு விழாவிற்க்கு துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்ற முறையில் சுவிதா அவர்களை அழைத்தோம். அவரது கணவரான கணேசன் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றுப் பேசி பாடல் பாடினார். கணேசனை, நாங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைக்கவில்லை. இது எதிர்பாராமல் நடந்த சம்பவம்’’ என்று தெரிவித்தார்..