திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் கண்மூடித் தனமாக அடித்ததோடு மட்டுமின்றி, காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக்கூறி, காலணியை மாணவி ஒருவர் மீது வீசிய ஜல் நீட் பயற்சி மைய உரிமையாளர் ஜலால் அகமது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் நேரில் சென்று ஆய்வு செய்தார். 


வீடியோ ஆதார அடிப்படையில் வழக்கு


இதுகுறித்து வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல் நீட் பயிற்சி மையத்தின் மீது புகார் வந்த நிலையில், பெற்றோரின் சிரமத்தை குழந்தைகள் உணர்வதில்லை என நீட் பயிற்சி மையம் விளக்கம் அளித்துள்ளது.


ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை முடிவுக்குப் பிறகே விரிவான விவரங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


2 ஆண்டுகளாக இந்த நீட் பயிற்சி மையம் இயங்கி வருவதாகவும் அங்கு 80 மாணவர்கள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருநெல்வேலி தவிர்த்து கேரளா, புதுச்சேரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதி மாணவர்கள் இங்கு படித்து வருகின்றனர். இவர்களுக்கு இரு விடுதிகள் இயங்கி வருகின்றனர். அதேபோல இதன் கிளை கடையநல்லூரில் செயல்பட்டு வருவதாகவும் அங்கு 50 - 80 மாணவர்கள் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 


பெற்றோர்கள் அதிக அளவு ஆர்வம்


கடந்த ஆண்டுகளில் பயிற்சி மையத்தில் படித்து, 12 பேர் வரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இருப்பதாகவும் இதனால், இங்கு சேர்க்க பெற்றோர்கள் அதிக அளவு ஆர்வம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.