பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். அப்துல் கலாம் திருவுருவ சிலை மற்றும் ராக்கெட் மாதிரினை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.

 

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டாக்டர். கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் பள்ளி வளாகத்தில் டாக்டர். அப்துல் கலாம் திருவுருவ சிலை மற்றும் பிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரினையினை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை நேற்று திறந்து வைத்தார். அப்போது அப்பள்ளியில் பயின்ற 25 மாணவிகள் சந்திராயன் 3 ஏவுகளை தளத்திற்கு சென்று வந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.



 

இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய அவர், “நிலவில் வளிமண்டலம் இல்லை என அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தெரிவித்த நிலையில், நிலவு தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இந்தியா நிலவில் தினம் தினம் வளிமண்டலம் உருவாகிறது என்ற உண்மையை வெளிக்கொண்டு வந்தது. இந்தியாவின் சந்திராயன்-1 செயற்கைக்கோள் மூலம் நிலவில், நீர் மூலக்கூறுகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.  இவ்வாறான திறமைகள் நம்மிடம் உள்ளன. இதைத் தொடர்ந்து முன்னெடுத்து வளர்ப்பதன் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் தனித்துவம் மேம்படும். வேலை வாய்ப்புக்காக அமெரிக்க உள்ளிட்ட நாடுகளை தேடி இந்தியர்கள் செல்லும் நிலையை மாற்றி, இந்தியாவை தேடி வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்புக்காக வரும் சூழலை நாம் உருவாக்க வேண்டும். மகாபலிபுரத்தில் இருந்து ஏவப்பட்ட 140க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களுடன் சென்ற ராக்கெட்டின் மூலம் உலகம் மீண்டும் ஒருமுறை இந்தியாவை திரும்பிப் பார்த்தது.

 

மேலும், நாம் பல அப்துல் கலாம்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். நிலவு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ அந்த உயரம் அளவுக்கு நமது ஆராய்ச்சிகளும் வளர வேண்டும். அரசு பள்ளியில் படித்த மாணவர்களே விண்வெளி ஆராய்ச்சியில் அதிகம் சாதனை செய்து வருகின்றனர். எனவே நமக்கான வாய்ப்பை ஒவ்வொருவரும் தவறாமல் பயன்படுத்த வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊடகம் இந்த நான்கு தரப்பும் அமைந்த கூட்டணி சிறப்பாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் பார்வையாளர்களாக உள்ள நீங்கள் பின்னாளில் இது போன்ற மேடைகளை அலங்கரிப்பவர்களாக உயர வேண்டும். இன்றைய சூழலுக்கு ஏற்ப விவசாயம், மருத்துவம் போன்ற துறைகளை மேம்படுத்த விண்வெளி சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகள் அவசியமாக உள்ளன.  இங்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பயன்படுத்துவோம். இது சார்ந்த எண்ணங்களை நமது மனதில் ஆழமாக விதைத்து அதை நோக்கி முயற்சிப்போம்”  எனப் பேசினார். இந்நிகழ்ச்சியில் கல்வி துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.