திருவாரூர் மாவட்டம் கல்யாண மகாதேவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பூந்தாழங்குடி கருப்பூர் சேந்தனாங்குடி கீழமனலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 131 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் பூந்தாழங்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி குபேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினரின் மகள் சாதனா எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் 17 ஆம் தேதி திருவாரூர் வட்டார அளவில் புலிவலத்தில் நடைபெற்ற இலக்கிய மன்ற போட்டியில் அறிவியலின் அற்புதங்கள் என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட சாதனா மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் 20 ஆம் தேதி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்ற போட்டியில் பெண்மையை போற்றுவோம் என்கிற தலைப்பில் பேசி முதல் பரிசை வென்றார்.இதன் மூலம் மாநில அளவிலான போட்டிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மார்ச் 27 ஆம் தேதி முதல் சென்னையில் ஒரு வாரம் கல்வி சுற்றுலா நடைபெற்றது. இதில் திருச்சி மண்டலத்தை சேர்ந்த 23 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் அங்கு அவர்களுக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அண்ணா நூற்றாண்டு நூலகம் கன்னிமாரா நூலகம் மெரினா கடற்கரை போன்ற இடங்களை சுற்றி காண்பித்ததுடன் பல்வேறு அறிவுத்திறன் சார்ந்த போட்டிகளையும் நடத்தினர்.இதில் தமிழகம் முழுவதும் இருந்து 25 மாணவர்கள் மாநில அளவில் தேர்ச்சி பெற்றனர் அதில் சாதனாவும் ஒருவர்.
இந்தநிலையில் பள்ளி மானிய கோரிக்கையில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இலக்கிய திறன் போட்டி மற்றும் கலைத் திருவிழாவில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் வெளிநாடு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவித்ததன் அடிப்படையில் சாதனா தற்போது வெளிநாடு செல்ல இருக்கிறார் அவருக்கான கடவுச்சீட்டு ஓரிரு நாட்களில் வரவிருக்கிறது.
இந்த போட்டி மாநிலம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. இந்த இலக்கிய மன்ற போட்டியில் விவசாயி ஒருவரின் மகள் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளிநாடு செல்வதை அந்த பள்ளி மட்டுமல்லாது இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவி சாதனா கூறுகையில், “நான் மாநில அளவில் இலக்கிய திறன் போட்டியில் வெற்றி பெற்றதை பெருமையாக கருதுகிறேன். மாவட்ட அளவில் வெற்றி பெற்றதன் காரணமாக முதன்முறையாக சென்னைக்கு சென்று அங்கு முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தேன். அப்துல் கலாம் கூறியது போல் விமானத்தில் பறக்க வேண்டும் என்று கனவு கண்டேன் அந்த கனவு இப்போது நிறைவேற போகிறது” என்று கூறினார்.
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் வனிதா கூறுகையில், “எங்கள் மாணவி மாநில அளவில் இலக்கிய திறன் போட்டிகளில் வெற்றி பெற்று வெளிநாடு சுற்றுலா செல்வது எங்கள் பள்ளிக்கு மட்டுமல்லாமல் இந்த ஊருக்கே பெருமை சேர்த்திருக்கிறது. இதற்காக உழைத்த ஆசிரியர்களுக்கும் சாதனாவிற்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.
மாணவி சாதனாவை இந்தப் பள்ளியின் கணித ஆசிரியரான ஜெயா என்பவர் இந்த இலக்கியத்திறன் போட்டிக்காக தயார் செய்துள்ளார் இதற்கு வகுப்பாசிரியர் கலைச்செல்வி தலைமையாசிரியர் வனிதா உள்ளிட்டோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.மாணவியின் வெற்றியை பறைசாற்றும் வகையில் பள்ளியின் வாயிலில் மாணவிய பாராட்டி பள்ளி சார்பில் பதாகை வைக்கப்பட்டுள்ளது.ஏழை எளிய பின்புலத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து வரும் அரசு பள்ளி மாணவி சாதனா விமானத்தில் பறக்க இருப்பதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர் குறிப்பாக திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மாணவி வெளிநாடு செல்வதற்கான டிராவல் பேக் மற்றும் ஆடைகளை வாங்கி அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.