அரசு பள்ளிகள் என்றாலே பலருக்கு எப்போதுமே, அரசு பள்ளிகள் மீது இருக்கும் குறைகள் மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதே குறைகள் தனியார் பள்ளிகள் மீது இருந்தாலும், அவை பெரியதாக வெளியே தெரிவது கிடையாது. ஆனால் தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகள் முன்மாதிரியான அரசு பள்ளிகளாக சமீப காலமாக உருவெடுக்க துவங்கி வருகிறது. இதற்கெல்லாம் பின்னணியில் அரசு பள்ளி ஆசிரியர்களின் முயற்சி என்பது, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி விடுகிறது. 

திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

அந்த வகையில் தமிழ்நாட்டிற்கு முன்னுதாரண பள்ளியாக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இருந்து வருகிறது. 117 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொடக்கப்பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செல்வகுமார், எடுத்திருக்கும் முயற்சியால் மாணவர்களின் சேர்க்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த பள்ளி டிஜிட்டல் முறையில் இயங்கி வருகிறது. இதனால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆன்லைனில் அட்மிஷன் - Government School Online Admission 

இந்தப் பள்ளியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில், ஆன்லைன் அட்மிஷன் முறையை அறிமுகப்படுத்தியிருப்பது தமிழ்நாடு முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பள்ளியில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் குறித்து, பேனர் மூலமாக, நோட்டீஸ் மூலமாகவும் அப்பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு வருகிறது. இந்த முறை விளம்பரங்கள் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன ?

பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து அந்த பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் கூறுகையில், காலை உணவு திட்டம், கலைத் திருவிழா, மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு, வண்ணமயமான புதிய வகுப்பறைகள், திறன் வகுப்பறைகள், மாணவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், சத்துணவு திட்டம், டிஜிட்டல் முறையில் பாடங்கள், இணையதள வசதி, ஸ்மார்ட் கிளாஸ் ரூம் வசதிகள், தமிழ் மற்றும் ஆங்கில வழி வகுப்புகள், புத்தக சுமை இல்லாத முப்பெருவ கல்வி முறை, ஆகியவை எங்க பள்ளியின் சிறப்பம்சங்கள் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவர்கள் சேர்க்கை விவரம்

இப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களின் பல்வேறு கட்ட முயற்சியால் மாணவர்களின் சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மாணவர்களின் செயற்கை 216 ஆக இருந்த நிலையில், இப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் 2020 ஆம் ஆண்டு 300 மாணவர்களும், 2021 ஆம் ஆண்டு 324 மாணவர்களும், 2022 ஆம் ஆண்டு 354 மாணவர்களும், 2023 ஆம் ஆண்டு 364 மாணவர்களும், 2024 ஆம் ஆண்டு 440 மாணவர்களும் என தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்து வருகிறது.

ஆசிரியர்களை பாராட்டிய அமைச்சர் 

இந்தநிலையில் தான் ஆன்லைன் மூலம் செயற்கை நடைபெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்து அதற்கான விளம்பரங்களில் ஈடுபட்டிருக்கும் தகவலை அறிந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தனது சமூக வலைதள பதிவில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து பாராட்டி உள்ளார். தற்போது சமூக வலைதளத்தில், அப்பள்ளி ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஆன்லைனில் அட்மிஷன் குறித்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.