TET தேர்வு வழக்கில், தமிழ்நாடு அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

ஆசிரியர் பணியில் தொடரவும் பதவி உயர்வு பெறவும் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று அண்மையில் செப்டம்பர் 1ஆம் தேதி அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. அதேபோல ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என்றும் இல்லையெனில் டெட் தேர்வில் 2 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

வேலையை விட்டு வெளியேறலாம்

ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை கட்டாயம் ஆக்க முடியுமா? அதேபோல சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் கல்வி உரிமையை டெட் தேர்வு பாதிக்குமா? என்று விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் சார்பில் அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.

Continues below advertisement

இதனால் 2012-ல் தமிழ்நாட்டில் டெட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படுவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் அரசு ஆசிரியர்கள் பக்கமே நிற்கும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி கூறி இருந்தார். ஆசிரியர் சங்கங்களுடனும் அவர் ஆலோசனை நடத்தி இருந்தார். 

உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல்

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான செய்திக் குறிப்பில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அப்படியே பின்பற்றினால், தமிழ்நாட்டில் பெரிய அளவில் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டி இருக்கும் என்றும் இது ஆசிரியர்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி, லட்சக்கணக்கான தமிழக மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறுகிய கால இடைவெளியில் புதிய, தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க முடியாது என்றும் அது வகுப்பறை கற்றலை பாதிப்பதுடன், பள்ளி அமைப்பின் நிலைத் தன்மையை பாதிக்கும் என்றும் அமைச்சர் அன்பில் கவலை தெரிவித்துள்ளார். 

புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே

அதேபோல, ‘’கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, டெட் தேர்வு கட்டாயம் என்பது, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு மட்டுமே. ஏற்கெனவே ஆசிரியர்களாக உள்ளவர்களுக்கு அது பொருந்தாது’’ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.