அரசு ஊழியர்‌, ஆசிரியர்‌ மற்றும்‌ அரசுப் பணியாளர்களின்‌ கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ பேரமைப்பின்‌ மாநில ஒருங்கிணைப்பாளர்‌ வெளியிட்டுள்ள செய்தி: 

’’தமிழ்நாட்டில்‌ 01.04.2003 முதல்‌ புதிய ஒய்வூதியத்திட்டம்‌ அமல்படுத்தப்பட்டபோது அன்றிலிருந்து இன்றுவரை பழைய பயனளிப்பு ஒய்வூதியத்திற்காக தொடர்ந்து போராடி வருவதும்‌ ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு. அவ்வாறு நாங்கள்‌ போராடிக் கொண்டிருக்கும்‌போது எங்களோடு போராட்டக்களத்திற்கு வந்து கழக ஆட்சி வந்தால்‌ உங்கள்‌ கோரிக்கைகள்‌ நிறைவேற்றப்படும்‌ என வாக்குறுதி அறிவித்ததோடு மட்டுமல்லாமல்‌, 2021 தேர்தல்‌ வாக்குறுதி பட்டியலில்‌ ''புதிய ஓய்வூதியத் திட்டம்‌ கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம்‌ மீண்டும்‌ நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்‌'' என எழுத்துபூர்வமாக அச்சிட்டு வெளியிட்டதோடு அனைத்து பிரச்சாரக் கூட்டங்களிலும்‌ இவ்வாக்குறுதியை குறித்து பேசியவர்‌ இன்றைய முதலமைச்சர்‌‌.

அதனால்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு ஊழியர்கள், / ஆசிரியர்கள் அனைவரும்‌ பெருவாரியாக இந்த ஆட்சி அமைந்திட ஆர்வத்துடன்‌ ஆதரவு தெரிவித்தனர்‌. இதைத் தபால்‌ வாக்குகளினால்‌ வெற்றிபெற்றவர்களும்‌, முன்னனி பெற்றவர்களும்‌ மறந்திருக்க மாட்டார்கள்‌ என நம்புகின்றோம்‌.

அதன்பிறகு 2022 ஆம்‌ ஆண்டு ஜாக்டோ-ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில்‌ப்முதலமைச்சர்‌ கலந்துகொண்டு லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்கள்‌ முன்னிலையில்‌ நான்‌ உங்களால்‌ ஆட்சிக்கு வந்தவன்‌, உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நான்‌ மறக்கவில்லை, மறுக்க வில்லை, மறைக்கவில்லை என்று சொல்லி மீண்டும்‌ நம்பிக்கை விதைகளை அரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களிடையே விதைத்துவிட்டு கடந்த 4 ஆண்டுகாலமாக அதுபற்றி எந்தவித நடவடிக்கையும்‌ எடுக்கவில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்‌ ஜாக்டோ-ஜியோ சார்பில்‌ போராட்டக்களத்தில்‌ இறங்கும்‌ போது மூன்று அமைச்சர்கள் முன்னிலையில்‌ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எங்கள்‌ கோரிக்கை நிறைவேற்றப்படும்‌ என உத்தரவாதம்‌ அளிக்கப்பட்டது.

நம்ப வைத்து ஏமாற்றும்‌ நயவஞ்சகம்

ஆனால்‌, கடந்த 10.01.2025 அன்று சட்டமன்றத்தில்‌ நிதியமைச்சர்‌‌ ஒன்றிய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியம்‌ குறித்த வழிகாட்டு நெறிமுறைகள்‌ வந்தவுடன்‌ அதுபற்றி ஆய்வு செய்யப்படும்‌ என கூறியது. எங்களை முதுகில்‌ குத்தியதைப்போல உணர்ந்தோம்‌. ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம்‌, புதிய ஓய்வூதியத்திட்டம்‌ இரண்டையும்‌ ஜாக்டோ-ஜியோ சார்பாக முழுமையாக ஆய்வு செய்துள்ளோம்‌. இரண்டும்‌ பெயரளவில்‌ வேறு,வேறான திட்டமாக தோன்றினாலும்‌, அடிப்படையில்‌ அவை இரண்டும்‌ பழைய ஒய்வூதியத்திட்டத்திற்கு இணையானது அல்ல என்பதை முழுமையாக உணர்ந்துள்ளோம்‌. தமிழக அரசும்‌ இதை நன்கு அறியும்‌ என நாங்களும்‌ அறிவோம்‌. அதன்பிறகும்‌, ஆய்வு செய்வோம்‌ என்பது  எங்களை ஏமாற்ற நினைக்கும்‌ செயலாகும்‌. இது நம்ப வைத்து ஏமாற்றும்‌ நயவஞ்சகச்செயல்‌.

தற்போது 04.02.2025 அன்று பழைய ஓய்வூதியத்திட்டம்‌, பங்களிப்பு ஒய்வூதியத் திட்டம்‌, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்‌ ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள்‌ குறித்து ஆராய்ந்திட குழு அமைக்கப்பட்டுள்ளதை, கொடுத்த வாக்குறுதியை காற்றில்‌ பறக்கவிட்ட செயலாக கருதுகிறோம்‌. இதை ஜாக்டோ-ஜியோ சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்‌.

சட்டிஸ்கர்‌, பஞ்சாப்‌, மஹாராஸ்டிரா, கோவா உள்ளிட்ட 7 மாநிலங்கள்‌ தங்களின்‌ ஆசிரியர்‌,/ ஊழியர்களிடம்‌ பிடித்தம்‌ செய்யப்பட்ட தொகையை PFRDA நிதி ஆணையத்தில்‌ செலுத்தியிருந்த நிலையிலும்‌, அந்த தொகையை மத்திய அரசு திரும்ப தர மறுத்துள்ள நிலையிலும்‌, பழைய ஓய்வூதியத்திட்டத்தை தங்கள்‌ ஆசிரியர்‌/ ஊழியர்களுக்கு அறிவித்துள்ளது. ஆனால்‌, தமிழ்நாட்டில்‌ 01.04.2003 முதல்‌ ஆசிரியர்கள்‌/ஊழியர்களிடம்‌ பிடித்தம்‌ செய்யப்பட்ட தொகை முழுவதும்‌ அரசின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ளதால்‌ பழைய ஓய்வூதியத்திட்டத்தை அறிவித்திட எவ்வித நெருக்கடியும்‌ இருக்காது என நாங்கள்‌ அறிவோம்‌.

அரசுக்கும்‌ சொல்லிக்கொடுக்கத் தயார்

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவதும்‌, நன்றி மறப்பது நன்றன்று என்பதும்‌ நமது பண்பு என மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்‌ ஆசிரியர்கள்‌ நாங்கள்‌. அரசுக்கும்‌ சொல்லிக்கொடுக்க நாங்கள்‌ தயாராக உள்ளோம்‌.

14.02.2025 அன்று வெள்ளிக்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும்‌ வட்டாட்சியர்‌ அலுவலகம்‌ முன்பாக மாலை நேர ஆர்பாட்டம்‌ நடத்திடுவது.

25.02.2025 செவ்வாய்கிழமை தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்‌ தலைநகரங்களிலும்‌ எழுச்சிமிகு மறியல்‌ போராட்டத்தினை முன்னெடுப்பது என முடிவெடுத்துள்ளோம்‌. அதற்கான மாநில உயர்மட்டக் குழு கூட்டத்தையும்‌, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்‌ கூட்டத்தையும்‌ நடத்தி முடித்துள்ளோம்.

இதன் பிறகும்‌ எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்க மறுத்தால்‌ மீண்டும்‌ ஒருங்கிணைப்பாளர்கள்‌ கூடி அடுத்தகட்டமாக தீவிரமான போராட்ட நடவடிக்கைகளை நடத்தத் திட்டமிடவுள்ளோம்‌.

எனவே, தமிழ்நாடு அரசு கடந்த 04.02.2025 அன்று அறிவித்துள்ள காலம்‌ கடத்தும்‌ ஆய்வுக்‌ குழுவை திரும்பப்பெற்று, அரசு ஊழியர்‌,/ ஆசிரியர்‌ நலன்‌ சார்ந்த வகையிலும்‌, தேர்தல்‌ கால வாக்குறுதிப் படியும்‌ உடன்‌ பழைய ஓய்வூதியத்திட்டத்தை மேலும்‌ காலதாமதப்படுத்தாமல்‌ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்‌’’.

இவ்வாறு ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.