அரசு கல்லூரிகளில் பணியாற்ற 4000 பேராசிரியர் பணியிடங்களுக்கு நடத்தப்படுவதாக இருந்த தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் திடீரென ரத்து செய்துள்ளது. புதிய தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக 2012- 13 முதல் 2016 - 17 வரை ஏராளமான காலியிடங்கள் தோன்றின. இதில் 4 ஆயிரம் பணி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு வெளியிட்டது.
இதில் உதவிப் பேராசிரியர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு லெவல் 10 அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக ரூ. 57,700 முதல் ரூ. 1,82,400 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இந்த பணியிடங்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிக்கை திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரசாணை நிலை எண்.230 மற்றும் 231, உயர் கல்வித்(F2) துறை, நாள்.06.10.2025-இன்படி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 14.03.2024 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 02 / 2024 இரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website:https://www.trb.tn.gov.in) கல்லூரிகளுக்கான 2708 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான புதிய அறிவிக்கை எண்.04/2025 இன்று (16.10.2025) வெளியிடப்படுகிறது.
பாட வாரியான காலிப் பணியிட விவரங்கள். கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் மேலும், அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க (Online Application) 17.10.2025 5 10.11.2025 வழங்கப்பட்டுள்ளது. கால அவகாசம் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை எண்:12/2019, நாள்.28.08.2019 & 04.10.2019 மற்றும் அறிவிக்கை எண்: 02 / 2024, நாள்.14.03.2024இன்படி, விண்ணப்பித்த பணிநாடுநர்கள் இப்புதிய அறிவிக்கையின்கீழ் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
இவர்களுக்கு மட்டும் இப்புதிய விண்ணப்பத்திற்கான தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் மற்றும் வயது வரம்பில் தளர்வும் வழங்கப்படுகிறது’’.
இவ்வாறு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.