தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. 


தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 29ம் தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூன் 1 ல் 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கும், ஜூன் 5 ம் தேதி முதல் 1 முதல் 5 வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கத்திரி வெயில் தாக்கம் குறையாததால் 2வது முறையாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, 6 முதல் 12 ம் வகுப்புகளுக்கு இன்றும், 1 முதல் 5 வகுப்புகளுக்கு 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 


பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே (அதாவது இன்று) மாணவர்களுக்கு பாடநூல், நோட்டு உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.  


ஏப்ரல் மாதமே முடிந்த தேர்வுகள்: 


2022- 23ஆம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதியுடன் தேர்வுகள் முடிந்தன. இந்த மாணவர்களுக்கு பள்ளி அளவில் அந்தந்த மாவட்ட வாரியாகத் தேர்வுகள் ஏப்ரல் 11ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஏப்ரல் 28ஆம் தேதி நிறைவு பெற்றது. 


இதையடுத்து, மாணவர்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கத்திரி வெயில் காரணமாக 6 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஜூன் மாதம் 12-ம் தேதியும் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஜுன் 14ம் தேதியும் (இன்று) பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.   


சனிக்கிழமையும் வகுப்புகள்: 


கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், இந்த பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதில், மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும். வழக்கமாக பண்டிகை காலம், மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்குவது இயல்பு எனவும் தெரிவிக்கப்பட்டது.