ஆதிதிராவிட மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
கல்வி உதவித்தொகை:
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் கடந்த 30.01.2023 அன்று திறக்கப்பட்டது. தற்போது வரை சுமார் 3 இலட்சம் மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
இத்திட்ட விதிமுறைகளின்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல், முதன்முறையாக e- KYC முறையில் ஆதார் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண்ணை கொண்டு ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, இணையத்தில் பெறப்பட்ட சாதிச் சான்று, வருமானச் சான்று, ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்புக் கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களையும் இணைய வழியில் சரிபார்க்கப்பட்டு,
மாணாக்கர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு (Aadhaar seeded to bank Account) கல்வி உதவித் தொகை மாணாக்கர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில் கல்வி உதவித்தொகை இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காணொளி வீடியோ
கல்வி உதவித்தொகை இணையதளத்தில் கல்வி உதவித் தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள காணொளி வீடியோ (Demo Video) பார்த்து உரிய ஆவணங்களுடன் கல்வி உதவித் தொகைக்கு தகுதியுள்ள மாணாக்கர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், கல்வி உதவித்தொகை இணையதளத்தில், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட (Aadhaar Seeding) வங்கி கணக்கு விவரங்களே எடுத்துக்கொள்ளப்படும் என்பதினால், கல்வி உதவித்தொகை விடுவிப்பதற்கு முன்னர் மாணாக்கர் அனைவரும் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா (Mapped) என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். மாணாக்கர்கள் எற்கனவே விண்ணப்பிக்கப்பட்ட
விண்ணப்பத்தில் பிழை இருப்பின், அப்பிழையினை மாணாக்கர் அளவிலேயே சரி செய்ய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
போதிய கால அவகாசம்
மேலும், கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும், எனவே இது தொடர்பாக அச்சமின்றியும், பிழையின்றியும் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’.
இவ்வாறு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை 624.06 இலட்சமாகும். அதில், ஆதி திராவிடர் மக்கள் 118.58 இலட்சமும் (19 சதவீதம்), பழங்குடியினர் மக்கள் 6.51 இலட்சமும் (1.04 சதவீதம்) உள்ளனர். 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழநாட்டின் மொத்த மக்கள் தொகை தோராயமாக 721 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிலையான வளர்ச்சியே அரசின் முதன்மையான நோக்கமாக உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சியை பொதுப் பிரிவினர் அளவிற்கு கொண்டுவருவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.
அதற்கு நிதியுதவிகளை அளித்து தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், இணைப்புச் சாலைகள், வீட்டுமனைப் பட்டா, வீடுகள், ஆரம்பப் பள்ளிகள், விடுதிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக அறிய: https://tnadtwscholarship.tn.gov.in/
உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிய: https://www.youtube.com/watch?v=MQbisW_VWZA