பல்கலைக்கழகங்களில் நிர்வாகக் குறைபாடு ஏற்படுவதுடன் கல்வித் தரமும் பாதிக்கப்படுவதால் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.

Continues below advertisement

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “கல்வியில் சிறந்த தமிழ்நாடு- புகழ்    கம்பன் பிறந்த தமிழ்நாடு”   என்று போற்றப்படும் தமிழகத்தின் உயர்கல்வி துறையின் நிலை கவலையளிப்பதாக இருக்கிறது.

காலியாக இருக்கும் முக்கியப் பதவிகள்

தமிழகத்திலுள்ள அரசு பல்கலைக்கழங்களில் 15-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள், பேராசியர்கள், துணைப் பேராசிரியர்கள், பதிவாளர்கள், தேர்வாணையர்கள், டீன் போன்ற பல முக்கியப் பதவிகள் நிரப்பப் படாமல் காலியாக உள்ளன.

Continues below advertisement

இதனால், உயர் கல்வித்துறையின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பேராசிரியர்கள் பற்றாக்குறையால் தமிழகத்தின் கல்வித்தரம், கல்வி ஆராய்ச்சி, நிர்வாகம் மற்றும் தேசிய சர்வதேச தரவரிசைகள் அனைத்தும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது. இதனால் புதிய பாடத்திட்டங்களை உருவாக்கி அறிமுகப்படுத்த முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

நடைபெறாத முக்கியக் கூட்டங்கள்

பல்கலைக்கழகங்களில், செனட், சிண்டிகேட், நிதிக்குழு போன்ற முக்கியக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதில் தடையேற்பட்டுள்ளன. தமிழகத்திலுள்ள 188 அரசுக் கலை அறிவியல் மற்றும் பி.எட் கல்லூரிகளில் 105 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இத்தனை காலி இடங்களா?

சென்னை பல்கலைக்கழகத்தில் 67.6% சதவிகிதமும், மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் 59.8% சதவிகிதமும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 54.7% சதவிகிதமும், திருவள்ளூர் பல்கலைக் கழகத்தில் 65.4% சதவிகிதமும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 34.1% சதவிகிதமும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் 33.3% சதவிகிதமும், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 30.8% சதவிகிதமும், பெரியார் பல்கலைக்கழகத்தில் 23.3% சதவிகிதமும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஆகவே, உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தை சீர்படுத்த தவெக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாலுமிகள் இல்லாத கப்பல்களாய் தவித்து நிற்கும் பல்கலைக்கழகங்களை காப்பாற்றவும், முந்தைய திமுக அரசைப்போல் காலம் தாழ்த்தி, பிரச்சனைகளை கிடப்பில் போடாமல் முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், “அரசு தொழிற்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகளும், மூன்று மருத்துவக் கல்லூரிகளும் தொடங்கப்படும். 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாக தரம் உயர்த்தப்படும்’’ என கடந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.