மாநில கல்விக் கொள்கையின் அம்சங்கள் இன்று தமிழ்நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டன. இதை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.8) சென்னையில் வெளியிட்டார்.

தேசிய கல்விக் கொள்கையின் சில கூறுகளை எதிர்த்து, மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதற்காக 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் குழு அமைக்கப்பட்டது. குழுவின்‌ தலைவராக டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள்‌ தலைமை நீதிபதி முருகேசன் நியமிக்கப்பட்டார்.

14 பேர் கொண்ட குழு

இந்த குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள்‌ தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் குழுவின் அவகாசம் நீட்டிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு இணைந்து கல்விக் கொள்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது.

இக்குழு கடந்த ஆண்டு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின் அதனை வெளியிட்டார்.

இதில் தமிழ்நாட்டுக்கென்ற தனித்த கல்விக் கொள்கைகள், பரிந்துரையில் இடம் பெற்றுள்ளன. அவை என்னென்ன தெரியுமா?

* மாணவர்களுக்கு 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கூடாது. 8ஆம் வகுப்பு வரை தடையற்ற, கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட வேண்டும். 

* 5 வயது பூர்த்தியான மாணவர்கள், தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தில் 1ஆம் வகுப்பில் சேரலாம். எனினும் மத்தியக் கல்வி பாடத்திட்டத்தில் 6 வயது முடிந்தால் மட்டுமே 1ஆம் வகுப்பில் சேர முடியும்.

* தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டும்.

11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து

* 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும். 11ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும்.

* மனப்பாட முறைத் தேர்வில் இருந்து திறந்தநிலைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, செய்முறைத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

* ஆசிரியர் பணித் திறன் மேம்படுத்தப்பட வேண்டும்.

* அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு ஆகியவை மாணவர்கள் மத்தியில் உறுதி செய்யப்பட வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.