தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த முறை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் வெயில் முன்னெப்போதும் இல்லாத அளவு, மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்தது. எனினும் கோடை மழை பெய்ததால், நிலம் சற்றே குளிர்ந்தது. ஆனாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்தி வருகிறது.


109 டிகிரி வெயில்


தமிழ்நாட்டில் பரவலாக பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில், 107 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது.


இதற்கிடையே சென்னையில், வெயிலின் தாக்கத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் இன்று (மே 31) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.


இந்தியா முழுவதும் வெப்ப அலை


தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே வெப்ப அலை வீசி வருகிறது. பிஹார் மாநிலத்தில் வெப்ப அலை காரணமாக பள்ளியிலேயே ஏராளமான மாணவர்கள் மயங்கி விழுந்த நிலையில், பள்ளிகள் ஜூன் 8ஆம் தேதிக்குப் பிறகே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை தாக்கத்தால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சுமார் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


டெல்லியில் வீசிய வெப்ப அலை காரணமாக, குழந்தைகள் மட்டுமல்லாது முதியோர்களும் மயக்கம் அடைந்தனர். மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட பக்கவாத பாதிப்பால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 




புதுச்சேரியில், ஜூன் 6-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடும் வெயில் காரணமாக ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பள்ளிகள் திறப்பைத் தள்ளிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.


இதற்கிடையே பள்ளிகளைத் தாமதமாகத் திறக்கலாமா என்று கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கடந்த ஆண்டும் ஒத்திவைப்பு


முன்னதாக, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.