தமிழ்நாடு முழுவதும் எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைமுறைப் படுத்தப்பட்டு, அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த தகவல்களை தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளிக் கல்வித் துறை பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில், 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் அனைத்து 38 மாவட்டங்களிலும் 2022-23-ஆம் ஆண்டு முதல் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2025- 26ஆம் ஆண்டிற்கு மத்தியக் கல்வி அமைச்சக திட்ட ஒப்புதல் குழுவின் அறிக்கையின்படி, 15,00,309 எழுதப் படிக்கத் தெரியாதோர் எண்ணிக்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கற்போர்களை முழுமையாகக் கண்டறிந்து அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவோடு வாழ்வியல் திறன்களைக் கற்கும் வாய்ப்பை வழங்கிடும் வகையில் முதற்கட்டமாக 5,37,869 கற்போர்கள் கண்டறியப்பட்டனர். அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு 15.06.2025 அன்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு எழுத்தறிவு சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9,63,169 கண்டறியப்பட்டு 39,250 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு, உரிய பயிற்சி அளிக்கப்பட்டு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டது. இவ்வாண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15,00,309 கற்போர்களை விட கூடுதலாக 733 தேர்வு எழுதியுள்ளனர்.
இத்தேர்வுப் பணியில் 39,250 தன்னார்வலர்கள், 40,000 ஆசிரியர்கள், 3500 ஆசிரியர் பயிற்றுநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட உதவித் திட்ட அலுவலர்கள் உட்பட 800 அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இத்திட்டத்தினைப் பொறுத்தவரை, மாநிலத்தை முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிப்பதை எதிர்நோக்கி செயல்படுத்தப்பட்டது.
இத்தேர்வின் தேர்ச்சி முடிவுகள் மத்திய அரசால் வெளியிடப்பட்ட பின்னர் தமிழ்நாட்டை முழுமையான எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்க பிரகாசமான வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.