தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான 'பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம்' என்பது தற்போது மாநிலத்தின் மிக முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளது. "சாக்குப்போக்குச் சொல்லி எங்களை ஏமாற்றுவது அநீதி" எனப் பகுதிநேர ஆசிரியர்கள் கொந்தளிப்புடன் தங்களது கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர்.
15 ஆண்டுகாள காத்திருப்பும்.. பலியான ஒரு உயிரும்!
தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அதிரடி அறிக்கையில், கடந்த 15 ஆண்டுகளாகத் தற்காலிகப் பணியாளர்களாகவே காலத்தைக் கடத்தி வரும் 12,000 குடும்பங்களின் கண்ணீர்க் கதையை விவரித்துள்ளார்.
"2016 மற்றும் 2021 ஆகிய இரண்டு சட்டமன்றத் தேர்தல்களின் போதும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்தது. குறிப்பாக, வாக்குறுதி எண் 181-ஐ நம்பி பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் வாக்களித்தனர். ஆனால், ஆட்சி முடிவுக்கு வரவிருக்கும் சூழலிலும், இன்னும் அந்த வாக்குறுதி காகித வடிவிலேயே உள்ளது பெரும் மனவேதனையை அளிக்கிறது," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சமீபத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவம் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் உலுக்கியுள்ளது.
கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கிய தொடர் போராட்டத்தின் போது, பணி நிரந்தரம் எட்டாக்கனியாக இருப்பதை எண்ணி மனமுடைந்த பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் என்பவர் விஷம் குடித்தார். சிகிச்சை பலனின்றி ஜனவரி 14-ஆம் தேதி அவர் உயிரிழந்தார். அது போராட்டக்களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் அறிவிப்பும்.. ஆசிரியர்களின் நிராகரிப்பும்!
ஆசிரியர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 14-ஆம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், ஆசிரியர்களுக்கு ரூ 2,500 சம்பள உயர்வு மற்றும் மே மாதத்தில் ரூ 10,000 ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், இந்த அறிவிப்பைப் பகுதிநேர ஆசிரியர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
"ரூ 15,000 தொகுப்பூதியத்தை வைத்துக் கொண்டு தற்போதைய விலைவாசி உயர்வில் எங்களால் வாழ்வாதாரத்தை நடத்த முடியாது. எங்களுக்குத் தேவை பிச்சை அல்ல, எங்களுக்கான உரிமை (பணி நிரந்தரம்) மட்டுமே"
என்று அவர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். மேலும், சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள், "வருங்காலக் காலிப் பணியிடத் தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்" என அறிவித்தது, அவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் எண்ணம் அரசுக்கு இல்லை என்பதையே காட்டுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சம வேலைக்குச் சம ஊதியம் எங்கே?
ஆசிரியர்கள் கூட்டமைப்பு முன்வைக்கும் முக்கிய வாதம் என்னவென்றால்,
ஒரே தகுதி, இருவேறு ஊதியம்: ஏற்கனவே இதே பாடங்களில் (உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி) பணியாற்றிய சிறப்பாசிரியர்கள் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். ஆனால், அதே தகுதியுள்ள பகுதிநேர ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் தொகுப்பூதியம்?
110 விதியின் கீழ் நியமனம்: 2011-ஆம் ஆண்டு 110 விதியின் கீழ் 16,549 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அதன் அடிப்படையில் நியமிக்கப்பட்ட எங்களை நிரந்தரமாக்குவதில் என்ன சட்டச் சிக்கல் இருக்க முடியும்?
அமைச்சரவைக் கூட்டத்தில் விடியல் பிறக்குமா?
இடைக்கால பட்ஜெட்டை முன்னிட்டு தமிழக அமைச்சரவைக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதுவே இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால், பகுதிநேர ஆசிரியர்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் கோட்டை நோக்கியே உள்ளது.
"அரசின் கொள்கை முடிவாக முதல்வர் இதனை அறிவிக்க வேண்டும். சாக்குப்போக்குகளைத் தவிர்த்து, தேர்தல் வாக்குறுதி 181-ஐ நிறைவேற்றி, உயிரிழந்த ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்கு அரசு வேலையும், நிவாரணமும் வழங்க வேண்டும். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அறிவிப்பு வரவில்லை என்றால், 12,000 குடும்பங்களின் வாக்குகள் அரசின் நிலையைத் தீர்மானிக்கும்," எனச் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
