டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
குரூப் 4 தேர்வு வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பதவி மட்டுமின்றி இளநிலை உதவியாளர், தட்டச்சர், பில் கலெக்டர், ஓட்டுனர் மற்றும் தனி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. தற்போது வன காப்பாளர், வன கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கும் குரூப் 4 தேர்வு மூலமே ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
எத்தனை பேர் எழுதிய தேர்வு?
2023ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு மாநிலம் முழுவதும் ஜூன் 9ஆம் தேதி 7247 தேர்வு மையங்களில் நடைபெற்றது. 6 ஆயிரத்து 244 காலிப் பணியிடங்களே உள்ள இந்த குரூப் 4 தேர்வுக்கு சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதவில்லை என்று தகவல் வெளியானது. சென்னையில் 432 மையங்களில் தேர்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேர்வர்கள் குரூப் 4 தேர்வை எழுதினர்.
தொடர்ந்து செப்டம்பர் 11ஆம் தேதி கூடுதலாக 480 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்தது. இதையடுத்து மொத்த இடங்களின் எண்ணிக்கை, 6,724 ஆக உயர்ந்தது.
காலி இடங்களை உயர்த்தக் கோரிக்கை
எனினும் காலிப் பணியிடங்கள் போதாது, இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று தேர்வை எழுதிய தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோரும், அரசு காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையான பணியிடங்கள் காலியாகி வருவதால், குரூப் 4 பணியிடங்கள் அதிகரிக்கும் என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பணியிடங்கள் வரை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் எப்போது?
குரூப் 4 தேர்வு முடிவுஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்பு வெளியான அறிவிப்பில் அக்டோபர் மாதமே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது விடைத்தாள் மதிப்பீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
கட்- ஆஃப் மதிப்பெண்கள் என்னவாகும்?
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர உள்ளதால், கட்- ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை காலிப் பணியிடங்களை உயர்த்தும் அதிகாரம் டிஎன்பிஎஸ்சி-க்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.