தமிழ்நாட்டில் ஆசிரியர் கலந்தாய்வுக்குப் பிறகு காலியான 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை, தற்காலிகமாக தொகுப்பூதியத்தைக் கொண்டு நிரப்புமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் டெட் தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


தமிழகம் முழுவதும் பள்ளி இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் தவிர்த்து, தகுதித் தேர்வில் ஏற்படும் தாமதம், பணி ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் காலியிடங்கள், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 


இவ்வாறு தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில், ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். ஆண்டுதோறும் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் நிலையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றனர். இவ்வாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகின்றன. 


குறிப்பாக தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் தமிழக அரசு நிரப்பியது. 


குறிப்பாக நேரடி நியமனம்/ பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாகத் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில்  நியமனம் செய்ய அனுமதி அளித்து நிதியும் ஒதுக்கியது.




இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் கடந்த மே மாதம் தொடங்கி நடைபெற்றது. இதில் 1,111 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும், 1777 நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் 424 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் என மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் செய்யப்பட்டனர். இந்த பணியிடங்களை, தற்காலிகமாக தொகுப்பூதியத்தைக் கொண்டு நிரப்புமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் டெட் தேர்வர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.


இதற்கு எதிர்க் கட்சித் தலைவர் ஈபிஎஸ், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ’’கடந்த ஆண்டு 13,331 இடைக்கால ஆசிரியர்கள் அமர்த்தப்பட்ட போது, அதிக அளவாக 6 மாதங்களில் அவர்களுக்கு மாற்றாக புதிய நிலையான ஆசிரியர்கள் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், முழு கல்வியாண்டு முடிவடைந்தும் புதிய ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கைக் கூட வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு அமர்த்தப்பட்ட இடைக்கால ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டும் பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம்?


தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளுக்கு கடந்த பத்தாண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நிலையான ஆசிரியர்களே இல்லாமல் மாணவர்களுக்கு எவ்வாறு தரமான கல்வியை வழங்க முடியும்?


தமிழ்நாட்டில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 80 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளனர். எனவே தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிலையான ஆசிரியர்களாக  நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.