தமிழ்நாடு முழுவதும் பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இரு விதமான படிப்புகளிலும் சேர 4.7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, உயர் கல்வியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கத் தொடங்கி உள்ளனர்.
2.50 பேர் விண்ணப்பித்த பொறியியல் படிப்புகள்
அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர நேற்று (மே 26) வரை 2, 50, 896 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 1, 84, 007 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். 1, 42, 824 மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களைச் சமர்ப்பித்து உள்ளனர்.
2.15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
அதேபோல கலை அறிவியல் கல்லுாரிகளைப் பொறுத்த வரையில், மே 26ஆம் தேதி வரை மாணவர்களில் 2, 15, 809 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இதில் கட்டணம் செலுத்தியோரின் எண்ணிக்கை 1,74,289 ஆக உள்ளது. இன்றோடு கலை, அறிவியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைகிறது. எனினும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிகளை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
அதேபோல பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்க இன்னும் அவகாசம் உள்ளது. ஜூன் 6ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://www.tneaonline.org/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- அதில் கேட்கப்பட்டுள்ள இ மெயில் முகவரி, பிறந்த தேதி, பிளஸ் 1 தேர்ச்சி, தகுதித் தேர்வு ஆகிய விவரங்களை உள்ளிட வேண்டும்.
- தொடர்ந்து விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
உதவி அழைப்பு மையம்
மாணவர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இதற்கு, பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது முக்கியம்.