'மக்களுடன் முதல்வர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தேர்வான இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து ஜூன் மாதத்துக்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 50 ஆயிரங்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசியதாவது:
’’'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் முதற்கட்டமாக, அனைத்து நகரப்புற உள்ளாட்சி அமைப்புகள், நகரப் புறங்களை ஒட்டியுள்ள கிராம ஊராட்சிகளில் 2 ஆயிரத்து 58 முகாம்கள் நடத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, எல்லா மாவட்டங்களிலும் இருக்கின்ற ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. பெறப்பட்ட மனுக்களை முதலில் இணையகளத்தில் பதிவேற்றம் செய்கிறார்கள். அதன்பிறகு தொடர்புடைய துறைக்கு அனுப்புகிறார்கள். முப்பதே நாட்களில் இந்த நடவடிக்கைகள் மூலமாக, நான் பெருமையோடு சொல்கிறேன், 3 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட இருக்கிறது. இது மிகப்பெரிய எண்ணிக்கை.
* வருவாய்த் துறையில் 42 ஆயிரத்து 962 பட்டா மாறுதல்களும், 18 ஆயிரத்து 236 நபர்களுக்குப் பல்வேறு வகையான சான்றிதழ்களும் தரப்பட்டிருக்கிறது.
* மின்சார வாரியத்தில் 26 ஆயிரத்து 383 நபர்களுக்கு புதிய மின் (இணைப்புகள்/ பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
* நகராட்சி நிர்வாகம் மறறும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக, 53 ஆயிரத்து 705 நபர்களுக்கு வரிவிதிப்பு /குடிநீர்/ கழிவுநீர் இணைப்பு/ கட்டட அனுமதி/ பிறப்பு, இறப்பு பதிவுகள் போன்றவை செயது தரப்பட்டிருக்கிறது.
* குறு, சிறு, நடுத்தரத் தொழில்துறை மூலம் ஆயிரத்து 190 நபர்களுக்கு 60 கோடியே 75 லட்ச ரூபாய் மதிப்பில் தொழில் கடன் உதவி செய்து தரப்பட்டிருக்கிறது.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 கோடி ரூபாய் மதிப்பில் 3 ஆயிரத்து 659 நபர்களுக்கு 3 சக்கர வாகனம்/ கடன் உதவிகள்/ கருவிகள்/ அடையாள அட்டைகள் தரப்பட்டிருக்கிறது.
* கூட்டுறவுத்துறை மூலமாக, 6 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 766 நபர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. இப்படி, முப்பதே நாட்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி ஆணை வழங்கியிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்தது முதலாகவே, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்கிக் கொண்டு வருகிறோம். முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, பல்வேறு புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.
60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனம்
இதுவரை 60 ஆயிரத்து 567 இளைஞர்களுக்கு அரசுப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வாணைய முகமைகள் மூலமாக 27 ஆயிரத்து 858 பணியிடங்களுக்குப் பணியாளர்கள் தேர்வு செயயப்பட்டிருக்கிறார்கள்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், மேலும் 50 ஆயிரம் புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
10 ஆயிரம் பணியிடங்கள்
இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகதான், இன்றைக்கு 1,598 பணியிடங்களுக்குத் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகிறது. பணி நியமனம் பெற்றுள்ளவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பணி நியன ஆணைகளை பெற்றுள்ள இளைஞர்கள், உங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு, அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு அவர்களின் குறைகளை களைய முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.