12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டின் அரசு பள்ளிகள் 92.16 சதவிகிதம் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது. 

2026ம் ஆண்டுக்கான 12ம் வகுப்பு பொதுதேர்வை தமிழ்நாட்டில் 4,18,724 மாணவியர்களும், 3.72,930 மாணவர்களும் எழுதினர். இதில் 7,53,694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று பள்ளிக்கல்வித்துறை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.17% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பள்ளிகள் வாரியான தேர்வு முடிவுகள் சதவிகிதம் பற்றிக் காணலாம். 

இந்த 12ம் வகுப்பு தேர்வில் மொத்தம் 7,536 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் 100% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,639 ஆக உள்ளது. 95% தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகளின் 5,170 ஆக இருக்கிறது. 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 489 ஆக அமைந்துள்ளது.1,572 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் 95% தேர்ச்சியைப் பெற்றிருக்கிறது. 

பள்ளிகள் வகையில் தேர்ச்சி சதவீதம் பார்த்தால்  அரசுப் பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களில் 92.16% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் பள்ளிகள் 96.14%,  தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.72%, இருபாலர் பள்ளிகள் 95.30%தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. அதேசமயம் பெண்கள் பள்ளிகள் 97.08%, ஆண்கள் பள்ளிகள் 90.49% ஆகவும் உள்ளது. 

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.59% சதவீதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள், ஆண்கள் பள்ளிகளை விட 4.81% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.