தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளன. அதாவது மே 6ஆம் தேதி அன்று வெளியாகும் முடிவுகளைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.


மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்பு, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்று முடிந்தன. குறிப்பாக 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர்.


ஏப்.1 முதல் விடைத்தாள் திருத்தம்


பொதுத் தேர்வு மார்ச் 22ஆம் தேதி முடிந்த நிலையில், மார்ச் 23-ம் தேதி முதல் மாணவர்களின் விடைத் தாள்கள் 101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு விடைத் தாள்கள் மார்ச் 28-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன. தொடர்ந்து விடைத்தாள் திருத்தம் பணி ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன.


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. 


எப்போது தேர்வு முடிவுகள்?


12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை, மே 6ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிடுகிறார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.


எப்படிப் பார்ப்பது?


மாணவர்கள் 


www.dge1.tn.nic.in , 
www.dge2.tn.nic.in , 
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in 


ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.


பிற வழிகள் 


* மாணவர்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.


* அதேபோல மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இல்லாமல், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


* மேலும் மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் தேர்வு முடிவுகளையும் அறிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு எப்போது?


முன்னதாகக் கடந்த ஆண்டு மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. 8.3 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 12 ஆம் வகுப்பு தேர்வில் 47,934 மாணவ, மாணவியர்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்குhttps://dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.