திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் நந்தினி 12ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று,  600 மதிப்பெண்களை வாங்கி சாதனை படைத்துள்ளார். 



தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அண்மையில் நடைபெற்று முடிந்தது. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வு, ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் எழுதினர்.


இந்தத் தேர்வில் நந்தினி என்னும் மாணவி 12ஆம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று,  600 மதிப்பெண்களை வாங்கி சாதனை படைத்துள்ளார். 



அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் அரசு உதவிபெறும் பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார் மாணவி நந்தினி. நந்தினியின் தந்தை சரவணகுமார், தச்சு தொழிலாளியாக உள்ளார். அம்மா பானுப் பிரியா இல்லத்தரசியாக உள்ளார். இளைய சகோதரர் பிரவீன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். 


சாதனை படைத்தது குறித்துப் பேசிய மாணவி நந்தினி, ’’எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பள்ளிக்குப் பெருமை சேர்த்திருக்கிறேன் என்பதில் பெருமையாக உள்ளது. பள்ளி என் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறேன். 


என் அப்பா கூலித் தொழிலாளிதான். ஆனால் படிக்க வைக்க முடியாது என்றோ, படிக்கக் காசில்லை என்று எப்போதுமே சொன்னதில்லை. என்ன விரும்புகிறோயோ அதைச் செய் என்றுதான் கூறுவார். என் அப்பாவின் உழைப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம். அவர் என்னைப் படிக்க வைக்கவில்லை என்றால், இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன்’’ என்று மாணவி நந்தினி நெகிழ்ச்சியுடன் பேட்டி அளித்துள்ளார்.