பிளஸ் 1 துணைத்‌ தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இன்றே மதிப்பெண்‌ பட்டியலைப்பதிவிறக்கம்‌ செய்து, விடைத்தாள்‌ நகல்‌  மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 


பிளஸ் 1 துணைத் தேர்வு கடந்த ஜூன்‌, ஜூலை மாதங்களில் நடைபெற்றது. தேர்வர்கள்‌, தங்கள்‌ தேர்வு முடிவினை  https://dge.tn.gov.in/ என்ற இணையதளம்‌ வாயிலாக தங்களது தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, மதிப்பெண்‌ பட்டியலாக (Statement of Marks) பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


பார்ப்பது எப்படி?


தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதள முகவரிக்குள்‌ சென்று Notification பகுதியில்‌ “HR SEC FIRST YEAR JUNE/JULY 2023 - PROVISIONAL CERTIFICATE DOWNLOAD” என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும். அதில்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌, தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண் (Roll No) மற்றும்‌ பிறந்த தேதி  (Date of Birth) ஆகியவற்றை பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ பட்டியலினை (Statement of Marks) பதிவிறக்கம்‌ செய்துக்‌ கொள்ளலாம்‌.


விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:


தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 01.08.2023 (செவ்வாய்க்‌ கிழமை) மற்றும்‌ 02 .08.2023 (புதன்‌ கிழமை) ஆகிய நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.45 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்‌.


புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில்‌ (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர்‌, இராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர்‌ அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள்‌ பதிவு செய்துகொள்ளலாம்‌.


விடைத்தாள்‌ நகல்‌, மறுகூட்டல்‌ - 1 ஆகியவற்றில்‌ எதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள்‌ விண்ணப்பிக்க இயலும்‌. தேர்வர்கள்‌ தங்களது விடைத்தாளின்‌ நகல்‌ வேண்டுமா? அல்லது மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்‌ பின்னர்‌ விண்ணப்பிக்க வேண்டும். விடைத்தாள்‌ நகல்‌ பெற்றவர்கள்‌ மட்டுமே விடைத்தாள்‌ மறுமதிப்பீடு கோரி பின்னர்‌ விண்ணப்பிக்க முடியும்‌.


மதிப்பெண்‌ மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பிக்கும்‌ பாடத்திற்கு விடைத்தாட்களின்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின்‌ நகல்‌ பெற்ற பிறகு அவர்கள்‌ மறுகூட்டல்‌ / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்‌.


விடைத்தாளின்‌ நகல்‌ (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம்‌: ஒவ்வொரு பாடத்திற்கும்‌ ரூ.275


மறுகூட்டல்‌ (Re-totalling-I) கட்டணம்‌
உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ - ரூ.305/-
எனையப்‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-


பணம்‌ செலுத்தும்‌ முறை :


தேர்வர்கள்‌ விடைத்தாள்‌ நகல்‌ / மறுகூட்டல் 1-க்கான கட்டணத்தை விண்ணப்பிக்க உள்ள சம்மந்தப்பட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகம்‌ மற்றும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.


விடைத்தாள்‌ நகல்‌- இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளும்‌ முறை :


விடைத்தாள்‌ நகல்‌ விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும்‌ ஒப்புகைச்‌ சீட்டினை மாணவர்கள்‌ பாதுகாப்பாக வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை பயன்படுத்தி தேர்வர்கள்‌ தங்களது விடைத் தாளின்‌ நகலினை இணையதளம்‌ வழியாக பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.