11-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


பள்ளிக்‌ கல்வித்துறையின்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம்‌ மற்றும்‌ பயிற்சி இன்று (12.08.2022), நாளை (13.08.2022) ஆகிய இரண்டு நாட்கள்‌ கோட்டூர்புரம்‌, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில்‌ நடைபெறுகிறது.


இந்தக் கூட்டத்தில், தொடக்கக் கல்வி இயக்ககம், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம், பள்ளி சாரா வயது வந்தோர் கல்வி இயக்ககம், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சமக்ர சிக்‌ஷா, பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.


இன்று நடைபெற்ற முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில், 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்யலாமா? என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் பேசி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.


மாணவர்கள் தொடர்ந்து 3 பொதுத் தேர்வுகளை ஆண்டுதோறும் எழுதுவதால் உளவியல் அழுத்தம் மற்றும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், அதனால் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


கொரோனா தொற்று மற்றும் அதைத் தொடர்ந்த ஊரடங்கு ஆகியவற்றால் மாணவர்கள் மத்தியில் கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் சுமையைக் குறைப்பது பற்றியும் பள்ளிக் கல்வித்துறை கலந்து ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. 




ஆரம்பத்தில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மட்டுமே நடைமுறையில் இருந்தது. இந்தப் பொதுத் தேர்வு முடிவுகளில் முந்த  நிலம் முழுவதும் தனியார் பள்ளிகள் இடையே கடும் போட்டி நிலவியது. 11ஆம் வகுப்புப் பாடங்களை நடத்தாமல் 12ஆம் வகுப்புப் பாடங்களில் முக்கியத்துவம் செலுத்தியதும் நடந்தது. இதனால்  நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு என்ற புதிய நடைமுறை, 2017- 18ஆம் கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.


அதையடுத்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்களை 1,200-ல் இருந்து 600-ஆக குறைக்கப்பட்டது. இரண்டு வகுப்புகளையும் சேர்த்து ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த மதிப்பெண்களைக் கருத்தில்கொண்டே உயர் கல்வி சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 


திடீரென பிளஸ் 1 வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடைபெறும். ஆனால், அந்த மதிப்பெண் உயர் கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அரசின் இந்த முடிவுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. தனியார் பள்ளிகளில் அழுத்தத்தால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கல்வியாளர்கள் குற்றம்சாட்டினர். எனினும் அந்த முறை அப்படியே தொடர்ந்தது. 


இந்த நிலையில், தற்போது 11-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 


தமிழ்நாட்டைத் தவிர்த்து, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட மத்தியக் கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநில கல்வி வாரியங்களின் பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண