மார்ச் மாதம் நடைபெற உள்ள 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள், எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதில் தெரிவித்து உள்ளதாவது:
பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்துதல்
- பள்ளித் தலைமையாசிரியா்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம் ஆண்டு செய்முறைத் தோவுக்கான வெற்று மதிப்பெண் பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும் தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகள், முறையே பிப்ரவரி 19 முதல் 24 வரையும், பிப்.12 முதல் பிப்.17 வரையும் நடத்தப்பட வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள், சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்
- செய்முறைத் தேர்வு மையங்கள் அமைத்தல்.
- செய்முறைத் தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட பணியாளர்களை நியமித்தல்
- முதன்மைக் கண்காணிப்பாளர்
- புறத்தேர்வாளர்கள் ஆக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
- அகத்தேர்வாளர்கள் ஆக அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அதேபோல திறமையான உதவியாளர்கள் (தேவைக்கேற்ப), எழுத்தர், அலுவலக உதவியாளர்கள், துப்புரவு பணியாளர், குடிநீர் வழங்குபவர்(Waterman) ஆகியோரை நியமிக்க வேண்டும்.
செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்களை இணையதளம் வழி பதிவேற்றம் செய்தல்
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்ட செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக தங்களுக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, பிற்சேர்க்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தங்கள் மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அனைவரது செய்முறைத் தேர்வு மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும் பதிவேற்றம் செய்யப்படாமல் இருத்தல் கூடாது.
இணையதளம் வாயிலாக செய்முறைத் தேவு மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் பணி நிறைவடைந்த பின்பு, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல் கட்டுகளை (உரிய இணைப்புகளுடன்) பள்ளி எண் வாரியாக கட்டுகளாகக் கட்டி, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.