10-ம் வகுப்பு துணைத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை பிற்பகல் வெளியாக உள்ளன. இதைத் தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


தமிழ்நாடு முழுவதும் 9.14 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  மே 19ஆம் தேதி அன்று வெளியாகின. இதனை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். முன்னதாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெற்றன. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 


78 ஆயிரம் பேர் தோல்வி


9,14,320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 8,35,614 பேர் தேர்ச்சியடைந்தனர். 78,706 மாணவர்கள் தோல்வியடைந்தனர். இந்த தேர்வில் பெரம்பலூர் (97.67% ), சிவகங்கை (97.53%), விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்தன. கடைசி இடம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு (83.54 %) கிடைத்தது.


இந்த நிலையில் பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிட்டது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெற்றன. இதன்படி மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதி தேர்வு தொடங்கி, ஜூலை 4ஆம் தேதி வரை நடைபெற்றது. 


இதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் ஜூலை 26ஆம் தேதி அன்று வெளியாகின. பத்தாம்‌ வகுப்பு துணைத்‌ தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள்‌ (தட்கல்‌ தனித் தேர்வர்கள்‌ உட்பட) தேர்வு முடிவினை, இணையதளத்தில் இருந்து தங்களது தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியைப் பதிவு செய்து, தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களாகவே பதிவிறக்கம்‌ செய்தனர். 


இந்த நிலையில், துணைத் தேர்வில் மாறுதல் விரும்பியோர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ளன.   


காண்பது எப்படி?


’’நடைபெற்ற ஜூன்‌ - ஜூலை 2023 பத்தாம்‌ வகுப்பு துணைத்தேர்வு முடிவின்மீது மறுகூட்டல்‌ கோரி விண்ணப்பித்தவர்களில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வர்களது தேர்வெண்களின்‌ பட்டியல்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ 18.08.2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல்‌ வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குள்‌ சென்று SSLC JUNE/ JULY 2023 RETOTAL RESULTS என்ற வாசகத்தினை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில் தோன்றும்‌ பக்கத்தில்‌ மதிப்பெண்‌ மாற்றம்‌ உள்ள தேர்வெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து மறுகூட்டல்‌ முடிவுகள்‌ மற்றும்‌ தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்‌ அடங்கிய தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌.


இப்பட்டியலில்‌ இடம்‌ பெறாத தேர்வெண்களுக்கான விடைத் தாள்களின்‌ மதிப்பெண்களில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லை எனத்‌ தெரிவிக்கப்படுகிறது’’ என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.