10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்  வெளியான நிலையில், தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 


9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி இன்று வெளியானது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். முன்னதாக 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 3 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இதில் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். 


முதலில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான அன்று, இந்த தேர்வு முடிவுகள் தேதி 19 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. சுமார்  9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில்  8,35, 614 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். சுமார் 78,706 பேர் தோல்வியடைந்துள்ளனர். 


இதனைத் தொடந்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் மே 23 முதல் 27 ஆம் தேதி வரை துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  மேலும்  தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் மே 26 ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல்  விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வானது ஜூன் 27 ஆம் தேதி முதல் நடக்கவ் உள்ளது. இதற்கு கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் சிறப்புகள் 



  • 10 ஆம் வகுப்பு தேர்வை 10,808 மாற்றுத்திறனாளிகள் எழுதினர். இதில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 264 சிறைவாசிகள் எழுதிய நிலையில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

  • 10 வகுப்பு தேர்வில்  3,718 பள்ளி 100 சதவிகித தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதில் 1,026 அரசுப் பள்ளிகள் அடங்கும். 

  • 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in  என்ற இணைய தளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். 

  • இந்த தேர்வில் பெரம்பலூர் (97.67% ),  சிவகங்கை (97.53%),  விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.  கடைசி இடம் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு (83.54 %) கிடைத்துள்ளது. 

  • 10 ஆம் வகுப்பி பொதுத்தேர்வில் தமிழில் யாரும் முழு மதிப்பெண் பெறவில்லை. ஆங்கிலத்தில்  89 பேரும்,  கணிதத்தில் 3649 பேரும், அறிவியல் பாடத்தில் 3584 பேரும், சமூக அறிவியலில் 320 பேரும் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.