2025ஆம் கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 16) வெளியான நிலையில், வட மாவட்டங்கள் தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது தெரிய வந்துள்ளது.
இதில் 93.80% தேர்ச்சி விகிதம் பதிவாகி உள்ளது. குறிப்பாக, மாணவர்கள் 8,17,261 பேர் (93.80%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 4.17,183 (95.88%) பேரும் மாணவர்கள் 4,00,078 (91.74%) பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட 4.14 மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்விற்கு வருகை புரியாதவர்கள் எண்ணிக்கை 15,652 ஆக உள்ளது.
முதலிடம் பிடித்த சிவகங்கை மாவட்டம்
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநில அளவில் சிவகங்கை மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடத்தில் விருதுநகர் மாவட்டம் உள்ளது. 3ஆம் இடத்தில் தூத்துக்குடி மாவட்டமும், அடுத்தடுத்த இடங்களில் முறையே கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களும் பெற்றுள்ளன.
வழக்கமாக ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் முதலிடங்களைப் பெறும். எனினும் இந்த முறை கொங்கு மண்டலம் கோட்டை விட்டுள்ளது.
கடைசி இடத்தில் வட மாவட்டங்கள்
இதில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் பின்தங்கிய இடங்களில் தொடர்ந்து நீடிக்கின்றன. குறிப்பாக ராணிப்பேட்டை மாவட்டம் 33ஆவது இடத்தில் 91.3 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. சென்னை 34ஆவது இடத்திலும் செங்கல்பட்டு மாவட்டம் 35ஆவது இடத்திலும் உள்ளன. இவர்களின் தேர்ச்சி விகிதம் முறையே 90.73 மற்றும் 89.82 ஆக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மாவட்டம் 36ஆவது இடத்திலும் கள்ளக்குறிச்சி 37ஆம் இடத்திலும் உள்ளன. தமிழ்நாட்டிலேயே கடைசியாக வேலூர் மாவட்டம், 85.44 சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. இதற்கு வட மாவட்டங்களில் ஆசிரியர் பற்றாக்குறையே காரணம் என்று குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுகிறது.
| ராணிப்பேட்டை | 91.3 % |
| சென்னை | 90.73 % |
| செங்கல்பட்டு | 89.82 % |
| திருவள்ளூர் | 89.6 % |
| கள்ளக்குறிச்சி | 86.91 % |
| வேலூர் | 85.44 % |
ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக கவனம்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ’’கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் முன்னேறி உள்ளன. அங்கு ஆசிரியர்களை இன்னும் நியமிக்க வேண்டி உள்ளது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இந்த ஆண்டு ஆசிரியர்கள் நியமனத்தில் வட மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும்.
அதேநேரத்தில் அங்குள்ள மாணவர்கள் போட்டித் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் என்பதை யாறும் மறுக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.